எசேக்கியேல் 7:5-13
5
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘பேராபத்து! கேள்விப்படாத ஒரு பேராபத்து வருகிறது.
6
முடிவு வந்துவிட்டது! முடிவு வந்துவிட்டது! அது உனக்கு விரோதமாகவே எழும்பிவிட்டது! அது வந்தேவிட்டது.
7
நாட்டில் குடியிருப்பவனே, அழிவு உன்மீது வந்துவிட்டது! வேளை வந்துவிட்டது! நாள் நெருங்கிவிட்டது! மலைகளின்மேல் மகிழ்ச்சியல்ல. திகிலே நிறைந்திருக்கிறது.
8
என் சீற்றத்தை இப்பொழுதே உன்மீது ஊற்றி; எனது கோபத்தை உனக்கெதிராய்த் தீர்க்கப்போகிறேன், உன் நடத்தைக்குத்தக்கதாய் உனக்குத் தீர்ப்பு வழங்கி, நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்கும் உன்னிடம் பழிவாங்குவேன்.
9
நான் உனக்குத் தயை செய்யவும் மாட்டேன். உன்னைத் தண்டியாமல் விடவுமாட்டேன். உன் நடத்தைகளுக்கும் உன் நடுவிலுள்ள உன் அருவருப்பான பழக்கவழக்கங்களுக்கும் தக்கதாக நான் பழிவாங்குவேன். அப்பொழுது உன்னை அடிக்கிறவராகிய நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.
10
“ ‘இதோ, அந்த நாள்! அது வந்துவிட்டது! அழிவு கொந்தளித்துக் குமுறுகிறது! அநீதியின் கோல் மொட்டுவிட்டு, அகந்தை மலர்ந்துவிட்டது!
11
கொடுமையைத் தண்டிக்க வன்முறை கோலாக வளர்ந்துவிட்டது! அவர்களுடைய மக்களிலோ கூட்டத்திலோ ஒருவனாகிலும் மீந்திருக்கமாட்டான். அவர்களுடைய செல்வமும், விலையுயர்ந்த ஒன்றுமே மீந்திருப்பதில்லை.
12
அந்தக் காலம் வந்துவிட்டது! நாளும் நெருங்கிவிட்டது! வாங்குகிறவன் மகிழாமலும், விற்கிறவன் கவலைப்படாமலும் இருக்கட்டும். ஏனெனில், கடுங்கோபம் எல்லோர்மேலும் வந்திருக்கிறது!
13
அவர்கள் இருவருமே உயிரோடிருக்கும் வரையிலும், விற்றவன் விற்கப்பட்ட நாட்டைத் திரும்பப்பெறமாட்டான். ஏனெனில் யாவரையும் குறித்த தரிசனம் மாற்றப்படமாட்டாது. அவர்களின் பாவத்தினிமித்தம் ஒருவனாகிலும் தன் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளவுமாட்டான்.
Settings