எசேக்கியேல் 46:1-8
1
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கிழக்கு நோக்கியிருக்கும் உள்முற்றத்து வாசல், ஆறு வேலை நாட்களும் மூடப்பட்டிருக்கவேண்டும். ஆனால், ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் அது திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
2
அரசன் வெளியிலிருந்து இந்த நுழைவு வாசலின் மண்டபத்தின் வழியாக உள்ளே வந்து, வாசல் நிலையருகில் நிற்கவேண்டும். ஆசாரியர்கள் அவனுடைய தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். அவன் நுழைவு வாசலின் முகப்பில் நின்று வழிபாடு செய்தபின், வெளியே போகவேண்டும். ஆனால் சாயங்காலம்வரை வாசல் மூடப்படக்கூடாது.
3
ஓய்வுநாட்களிலும், அமாவாசை தினங்களிலும் நாட்டு மக்கள் யெகோவாவின் முன்னிலையில் புகுமுக நுழைவாசலில் வழிபாடு செய்யவேண்டும்.
4
ஓய்வுநாளில் அரசனால் யெகோவாவுக்கென்று கொண்டுவரப்படும் தகன காணிக்கையானது, பழுதற்ற ஆறு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுமாக இருக்கவேண்டும்.
5
செம்மறியாட்டுக் கடாவுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கையானது ஒரு எப்பா அளவுடையதாக இருக்கவேண்டும். செம்மறியாட்டுக் குட்டிகளுடன் செலுத்தப்படும் தானிய காணிக்கை அரசன் விரும்பிய அளவினைக் கொண்டதாயிருக்க வேண்டும். அதோடு ஒவ்வொரு எப்பா அளவு தானியத்துடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயும் செலுத்தப்படுதல் வேண்டும்.
6
அவன் அமாவாசைத் தினத்திலே பழுதற்ற இளங்காளையொன்றையும், ஆறு செம்மறியாட்டுக் குட்டிகளையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் செலுத்தவேண்டும்.
7
அவன் ஒரு காளையுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும் ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவு தானிய காணிக்கையையும், செம்மறியாட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பிய அளவு தானிய காணிக்கைகளையும் செலுத்தவேண்டும். ஒவ்வொரு எப்பா தானிய காணிக்கைளுடனும் ஒரு ஹின் அளவு எண்ணெயையும் செலுத்தவேண்டும்.
8
அரசன் உட்செல்லும்போது அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவு வாசலின் வழியாகப்போய் அதே வழியாகவே திரும்பி வரவேண்டும்.
Settings