Skip to content
எசேக்கியேல் 45:7-17

எசேக்கியேல் 45:7-17

7
“ ‘ஒவ்வொரு புறத்திலும் பரிசுத்த பகுதியின் எல்லைகளையும் நகரத்துக்குரிய சொத்தின் எல்லையையும் கொண்டதாக அரசனுக்குரிய நிலம் அமைந்திருக்கும். அது மேற்குப்புறத்தில் மேற்குப்பக்கமாகவும், கிழக்குப்புறத்தில் கிழக்குப்பக்கமாகவும் அகன்றிருக்கும். மேற்கிலிருந்து கிழக்கு எல்லைவரையுள்ள பகுதி நீளமாய்போய் ஒரு கோத்திரப் பங்குக்கு எதிராயிருக்கவேண்டும்.
8
அந்நிலம் இஸ்ரயேலிலே அரசனுடைய உரிமைச்சொத்தாக இருக்கும். இனிமேல் என் அரசர்கள் என் மக்களை ஒடுக்கமாட்டார்கள். இஸ்ரயேலர் தங்கள் கோத்திரங்களுக்கேற்ப நாட்டை உரிமையாக்கிக்கொள்ள அவர்கள் அனுமதிப்பார்கள்.
9
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இஸ்ரயேலின் அரசர்களே, நீங்கள் செய்ததுபோதும். உங்கள் வன்முறைகளையும், ஒடுக்குதல்களையும் விட்டுவிட்டு, நீதியானவற்றையும் சரியானவற்றையும் செய்யுங்கள். என் மக்களின் உடைமைகளைப் பறிப்பதையும் நிறுத்துங்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
10
நீங்கள் நிறுத்துவதற்கு சரியான அளவைகளையும் திண்மம் அளப்பதற்கு சரியான அளவுடைய எப்பா மரக்கால்களையும், திரவம் அளப்பதற்கு சரியான அளவுடைய பாத் குடங்களையும் உங்களுக்கு இருக்கட்டும்.
11
எப்பா மரக்கால் அளவும், பாத் குடத்தின் அளவும் ஒரே அளவானவையாக இருக்கவேண்டும். ஒரு பாத் குடத்தின் அளவு ஓமர் அளவில் பத்தில் ஒன்றும், ஒரு எப்பா அளவும் ஒரு ஓமர் அளவில் பத்தில் ஒன்றுமாக இருக்கவேண்டும். இரு அளவுகளுக்கும் ஓமரே பொது அளவையாக இருக்கவேண்டும்.
12
நிறுத்துவதற்குரிய பொது அளவை, சேக்கலாக இருக்கவேண்டும். இருபது கேரா அளவே ஒரு சேக்கல் அளவாகும். அறுபது சேக்கல் ஒரு இராத்தலுக்கு சமானமாகும்.
13
“ ‘நீங்கள் செலுத்தவேண்டிய விசேஷச நன்கொடையானது, ஒவ்வொரு ஓமர் அளவு கோதுமையிலிருந்து, ஆறில் ஒரு பங்கு எப்பா அளவாயும், ஒவ்வொரு ஓமர் அளவு வாற்கோதுமையிலிருந்து ஆறில் ஒரு பங்கு எப்பா அளவாயும் இருக்கவேண்டும்.
14
பாத் அளவு குடத்தினால் அளக்கப்பட்டு, நீங்கள் செலுத்தவேண்டிய எண்ணெயின் அளவு ஒவ்வொரு கோரிற்கும் ஒரு பாத்தின் பத்தில் ஒரு பங்காகும். ஒரு கோர் என்பது பத்து பாத் குடங்கள் அல்லது ஒரு ஓமர் ஆகும். ஏனெனில் பத்து பாத் குடங்கள் ஒரு ஓமருக்குச் சமமானதாகும்.
15
மேலும், இஸ்ரயேலில் நல்ல நீர்ப்பாய்ச்சலுள்ள இடத்தில் மேயும் மந்தைகளில் ஒவ்வொரு இருநூறு செம்மறியாடுகள்கொண்ட மந்தையிலிருந்தும் ஒரு செம்மறியாடு எடுக்கப்படவேண்டும். இவை மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி, தானிய காணிக்கைகளாகவும், தகன காணிக்கைகளாகவும், சமாதான காணிக்கைகளாகவும் பயன்படுத்தப்படும் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
16
இஸ்ரயேலின் அரசனுடைய பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்படும் இவ்விசேஷ நன்கொடையில் நாட்டின் எல்லா மக்களும் பங்குகொள்வார்கள்.
17
பண்டிகைகளும், அமாவாசைகளும், ஓய்வுநாட்களுமான இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லா விசேஷ தினங்களிலும் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுக்கவேண்டியது, அரசனுடைய கடமையாகும். இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு பாவநிவிர்த்தி செய்வதற்காக அவன் பாவநிவாரண காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் கொடுப்பான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options