Skip to content
எசேக்கியேல் 39:1-11

எசேக்கியேல் 39:1-11

1
“மனுபுத்திரனே, நீ கோகுவுக்கு விரோதமாய் இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: மேசேக், தூபால் நாடுகளின் பிரதம இளவரசனான கோகே, நான் உனக்கு விரோதமாய் இருக்கிறேன்.
2
நான் உன்னை எதிர்ப்புறமாகத் திருப்பி இழுத்துச் செல்வேன். உன்னை வடதிசையின் தொலைவிலிருந்து கொண்டுவந்து, இஸ்ரயேலின் மலைகளுக்கு விரோதமாக அனுப்புவேன்.
3
அங்கு நான் உன் இடதுகையிலிருந்து உனது வில்லைத் தட்டிவிட்டு, உன் வலதுகையிலிருந்து அம்புகளை விழப்பண்ணுவேன்.
4
அப்பொழுது நீயும் உனது எல்லாப் படைகளும் உன்னுடன் இருக்கும் பல நாடுகளும் இஸ்ரயேலின் மலைகளின்மீது விழுவீர்கள். நான் உன்னைப் பிணம் தின்னும் எல்லாவித பறவைகளுக்கும், காட்டு மிருகங்களுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
5
நான் சொல்லிவிட்டேன்; திறந்த வெளியிலே நீ விழுவாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
6
மாகோகின்மேலும் கரையோர நாடுகளில் பாதுகாப்பாக வாழ்வோரின்மேலும் நான் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
7
“ ‘என் மக்களாகிய இஸ்ரயேலரின் மத்தியில் நான் என் பரிசுத்த பெயரை அறியப்பண்ணுவேன். எனது பரிசுத்த பெயர் அசுத்தப்படுவதற்கு இனிமேலும் இடங்கொடேன். அப்பொழுது, நான் யெகோவா, இஸ்ரயேலில் பரிசுத்தர், என்பதைப் பல நாடுகளும் அறிந்துகொள்வார்கள்.
8
நியாயத்தீர்ப்பு வருகிறது. நிச்சயமாக அது நடைபெறப்போகின்றது. அது நான் சொன்ன விதமாகவே நடக்கும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். நான் கூறிய நாள் இதுவே.
9
“ ‘பின்பு இஸ்ரயேல் நகரங்களில் வாழ்பவர்கள் வெளியே போய், சிறிதும் பெரிதுமான கேடயங்கள், அம்புகள், வில்லுகள், குண்டாந்தடிகள், ஈட்டிகள் ஆகிய போராயுதங்களை ஒன்றுசேர்த்து எரிபொருளாகப் பயன்படுத்தி எரிப்பார்கள். ஏழு வருடங்களுக்கு அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவார்கள்.
10
அவர்கள் போராயுதங்களை எரிபொருளாகப் பயன்படுத்துவதால், வெளியே சென்று விறகை பொறுக்கவோ, அதைக் காட்டிலிருந்து வெட்டவோ வேண்டியதில்லை. மேலும் அவர்களைச் சூறையாடியவர்களை அவர்கள் சூறையாடுவார்கள். அவர்களைக் கொள்ளையடித்தவர்களை அவர்கள் கொள்ளையடிப்பார்கள் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
11
“ ‘அந்நாளில் நான் கோகுவுக்கு இஸ்ரயேலின் சவக்கடலை நோக்கிக் கிழக்கே போகும் பயணிகளின் பள்ளத்தாக்கில் புதைக்கும் இடமொன்றைக் கொடுப்பேன். கோகும் அவனுடைய எல்லா கூட்டத்தாரும் அங்கு புதைக்கப்படுவதால் அது பயணிகளின் பாதைக்குத் தடையாக அமையும். எனவே அது அமோனியனாகிய கோகின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options