Skip to content
எசேக்கியேல் 32:1-16

எசேக்கியேல் 32:1-16

1
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பன்னிரண்டாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2
“நீ எகிப்தின் அரசனான பார்வோனைப் பற்றி ஒரு புலம்பலை எடுத்து அவனிடம் சொல்லுங்கள்: “ ‘பல நாடுகளின் மத்தியில் நீ ஒரு சிங்கத்தைப் போலிருக்கிறாய்! நீ கடல்களில் இருக்கும் ஒரு இராட்சதப் பாம்பைப்போல் இருக்கிறாய். நீரோடைகளை அங்குமிங்கும் அடித்து, கால்களால் தண்ணீரைக் கலக்கி, நீரோடைகளைச் சேறாக்குகிறாய்.
3
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைக்கொண்டு நான் என் வலையை உன்மேல் வீசுவேன். என்னுடைய வலையினால் அவர்கள் உன்னை மேலே இழுத்துக்கொள்வார்கள்.
4
நான் உன்னைத் தரையிலே எறிந்து திறந்தவெளியில் உன்னை வீசிவிடுவேன். ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மீது தங்கச்செய்து, பூமியின் மிருகங்களெல்லாம் உன்னைத் தின்று திருப்தியுறச் செய்வேன்.
5
நான் உன் சதையை மலைகளில் சிதறச்செய்து, பள்ளத்தாக்குகளை உன் மீதியான சதைகளால் நிரப்புவேன்.
6
வழிந்தோடும் உன் இரத்தத்தால் மலைகள் வரைக்கும் நிலத்தையெல்லாம் ஈரமாக்குவேன். மலை இடுக்குகள் உன் சதையினால் நிரப்பப்படும்.
7
நான் உன்னை அழிக்கும்போது, வானத்தை மூடி, அதன் நட்சத்திரங்களை இருளடையச் செய்வேன். சூரியனை மேகத்தால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.
8
உனக்கு மேலாக வானங்களில் ஒளிதரும் சுடர்களையெல்லாம் இருளடையச் செய்வேன். உன் நாட்டின்மீதும் நான் இருளை வரச்செய்வேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
9
நாடுகளுக்கு மத்தியிலும் நீ அறியாத நாடுகள் மத்தியிலும் நான் அழிவை உன்மேல் கொண்டுவரும்போது, திரளான மக்களின் இருதயத்தைக் கலங்கப்பண்ணுவேன்.
10
உன்னைக் கண்டு அநேக மக்களைத் அதிர்ச்சியுறச் செய்வேன். அவர்களுடைய அரசர்களுக்கு முன்பாக என் வாளை நான் சுழற்றும்போது, அவர்கள் உன் நிமித்தம் பேரச்சத்தால் நடுங்குவார்கள். உனது விழுகையின் நாளில், அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் உயிருக்காக ஒவ்வொரு வினாடியும் நடுங்குவார்கள்.
11
“ ‘ஏனெனில் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘பாபிலோன் அரசனுடைய வாள் உனக்கு விரோதமாய் வரும்.
12
நாடுகளுக்குள் மிகக் கொடிய வலியோரின் வாள்களினால், உன் மக்கள் கூட்டங்களை விழச்செய்வேன்; எகிப்தின் பெருமையை அவர்கள் ஒழியச்செய்வார்கள். அவளுடைய மக்கள் கூட்டங்களெல்லாம் அழிக்கப்படும்.
13
நிறைவான நீர்நிலைகளருகில் இருக்கும் அவளுடைய மந்தைகளையெல்லாம் அழிப்பேன். அந்த நீர்நிலைகள் இனியொருபோதும் மனித காலினால் குழப்பப்படவோ, அல்லது மந்தைகளின் குழம்புகளால் சேறாக்கப்படவோ மாட்டாது.
14
பின்பு நான் எகிப்தின் நீர்நிலைகளை அமைதலடையச் செய்து, அவளுடைய நீரூற்றுக்களை எண்ணெய்போல் வழிந்தோடச்செய்வேன் என, ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15
நான் எகிப்தைப் பாழாக்கி, நாட்டிலுள்ள அனைத்தையும் நீக்கி, அதை வெறுமையாக்கி, அங்கு வாழும் எல்லோரையும் அழிக்கும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
16
“அவர்கள் அவளுக்காகப் பாடும் புலம்பல் இதுவே. பல நாடுகளின் மகள்களும் அதைப் பாடுவார்கள். எகிப்திற்காகவும் அவளுடைய எல்லா மக்கள் கூட்டங்களுக்காகவும் அவர்கள் அதைப் பாடுவார்கள்” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options