Skip to content
எசேக்கியேல் 21:8-16

எசேக்கியேல் 21:8-16

8
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
9
“மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா கூறுவது இதுவே: “ ‘ஒரு வாள், அது கூர்மையானதும், துலக்கப்பட்டதுமான ஒரு வாள்.
10
அது படுகொலைக்காக கூர்மையாக்கப்பட்டது. மின்னல் ஒளிவீச துலக்கப்பட்டது. “ ‘என் மகன் யூதாவின் செங்கோலைக் குறித்து, நாம் மகிழ்வோமோ? அத்தகைய கோல் ஒவ்வொன்றையும் அவ்வாள் அலட்சியம்செய்கிறதே.
11
“ ‘துலக்கப்படுவதற்கும் கையால் பிடிப்பதற்கும் அந்த வாள் நியமிக்கப்பட்டிருக்கிறது. அது கூர்மையாக்கப்பட்டும், துலக்கப்பட்டும் படுகொலைசெய்பவனின் கைக்குத் தயாராக இருக்கிறது.
12
மனுபுத்திரனே, அந்த வாள் என் மக்களுக்கு விரோதமாக இருப்பதனால் அழுது புலம்பு; அது இஸ்ரயேலின் தலைவர்கள் எல்லோருக்கும் விரோதமாக இருக்கின்றது. அவர்கள் என் மக்களோடுகூட, வாளுக்கு இரையாக்கப்படுவார்கள். ஆதலால், உன் மார்பில் அடித்து அழு.
13
“ ‘நிச்சயமாகவே சோதனை வரும். வாளால் இகழப்பட்ட யூதாவின் செங்கோல் தொடராவிட்டால், என்ன நடக்கும் என்று ஆண்டவராகிய யெகோவா கேட்கிறார்.’
14
“ஆகையால், மனுபுத்திரனே நீ, இறைவாக்குரைத்து, கைகளைத் தட்டு. இரண்டுதரமோ மூன்றுதரமோ வாள் வீசப்படட்டும். அது எல்லாப் பக்கமும் அவர்கள்மேல் வரும் படுகொலையின் வாள், அது பெரும் படுகொலைக்கான வாள்,
15
இருதயங்கள் உருகி அநேகர் விழும்படியாக, அவர்கள் வாசல்களிலெல்லாம் படுகொலைக்காக நான் வாளை நிலைப்படுத்தியுள்ளேன். அது துலக்கப்பட்டு மின்னல் கீற்றுப்போல் பாய்வதற்காகத் தீட்டப்பட்டு, படுகொலைக்கு ஆயத்தமாகக் கையில் பிடிக்கப்பட்டுள்ளது.
16
வாளே! உன் வெட்டும் பகுதி எங்கு திரும்புகிறதோ, அங்கு வலப்புறமாகவும், பின் இடப்புறமாகவும் வீசி வெட்டு.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options