எசேக்கியேல் 17:11-24
11
பின்பு யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது.
12
“இக்காரியங்கள் எவைகளைக் குறிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘என இக்கலகம் செய்யும் குடும்பத்தாரிடம் கேள்.’ மேலும் நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘பாபிலோனிய அரசன் எருசலேமுக்குப் போய் அதன் அரசனையும் உயர்குடி மக்களையும் தன்னுடனேகூட பாபிலோனுக்குக் கொண்டுவந்தான்.
13
பின்பு பாபிலோனிய அரசன் அரச குடும்பத்திலிருந்து சிதேக்கியாவை அரசனாகத் தெரிந்துகொண்டு, அவனோடு உடன்படிக்கைச்செய்து, சத்தியமும் வாங்கிக்கொண்டான். ஆனால் நாட்டின் தலைவர்களையோ அவன் தன்னோடு கொண்டுபோனான்.
14
இஸ்ரயேல் மீண்டும் எழும்பாதபடி வலிமை குறையவும், அவனுடைய உடன்படிக்கை மட்டும் கைக்கொள்ளப்பட்டு நிலைத்திருக்கவுமே அவ்வாறு செய்தான்.
15
ஆனால் சிதேக்கியா அரசனோ குதிரைகளையும் ஒரு பெரிய படையையும் பெறுவதற்காக தனது தூதுவர்களை எகிப்திற்கு அனுப்பினான். இவ்விதம் இவன் பாபிலோனுக்கு விரோதமாய்க் கலகம் செய்தான். அவனுக்கு வெற்றி கிடைக்குமோ? இத்தகைய காரியங்களைச் செய்கிறவன் தப்புவானோ? உடன்படிக்கையை முறித்துக்கொண்ட பின்பு அவன் தப்பிக்கொள்வானோ?
16
“ ‘இல்லையே தன்னை அரசனாக்கிய பாபிலோன் அரசனுடைய சத்தியத்தை அவமதித்து, அவனுடைய உடன்படிக்கையையும் முறித்துப்போட்டானே. எனவே சிதேக்கியா அந்த அரசனின் நாடாகிய பாபிலோனிலேயே மரணமடைவான். நான் வாழ்வது நிச்சயம்போலவே இவ்வாறு நடப்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
17
அநேக உயிர்களை அழிக்கும்படி எருசலேமுக்கெதிராக முற்றுகைகளும், அரண்களும், கொத்தளங்களும், அமைக்கப்படும்போது, பார்வோனும், அவனுடைய பெரும் படைகளும், அவனுடைய மக்கள் திரளும் யுத்தத்தில் சிதேக்கியாவுக்கு உதவியாக இருக்கமாட்டார்கள்.
18
அவன் உடன்படிக்கையை மீறி, சத்தியத்தை அசட்டை செய்துவிட்டான். கைகொடுத்து ஆணையிட்டிருந்தும், அவன் இக்காரியங்களைச் செய்தபடியால் தப்பவேமாட்டான்.
19
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, அவன் உதாசீனம் செய்த என் சத்தியத்தையும், அவன் மீறிய என் உடன்படிக்கையையும் நான் அவன் தலைமீது வரப்பண்ணுவேன் என்பதும் நிச்சயம்.
20
நான் என் வலையை அவனுக்கு விரிப்பேன். அவன் என் கண்ணியில் அகப்படுவான், நான் அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுவந்து, அவன் எனக்கு உண்மையற்றவனாய் நடந்ததினிமித்தம் அவனுக்குத் தண்டனை கொடுப்பேன்.
21
பயந்து ஓடும் அவனுடைய படையினர் அனைவரும் வாளினால் மடிவார்கள். மீதியாய் இருப்பவர்கள் திசையெங்கும் சிதறடிக்கப்படுவார்கள். அப்பொழுது யெகோவாவாகிய நானே பேசினேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
22
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. கேதுருமரத்தின் உச்சியிலிருந்து நானே ஒரு துளிரை எடுத்து அதை நாட்டுவேன். அதனுடைய நுனியிலிருக்கும் துளிர்களிலிருந்து இளங்கிளை ஒன்றை முறித்து அதை உயர்ந்ததும் கம்பீரமானதுமான மலையொன்றில் நாட்டுவேன்.
23
இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அதை நான் நாட்டுவேன். அது கிளைகளைப் பரப்பி, பழங்களைக் கொடுத்து, சிறப்பான கேதுரு மரமாகும். எல்லாவித பறவைகளும் அதில் கூடுகட்டும். அதன் கிளைகளின் நிழலிலே அவை தஞ்சமடையும்.
24
அப்பொழுது உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயரமாய் வளரப்பண்ணுகிறவர் யெகோவாவாகிய நானே என்பதை வெளியின் மரங்களெல்லாம் அறிந்துகொள்ளும். பச்சை மரத்தைப் பட்டுப்போகப்பண்ணுகிறவரும், பட்டுப்போனதைத் தளைக்கப்பண்ணுகிறவரும் யெகோவாவாகிய நானே என்பதையும் அவை அறிந்துகொள்ளும். “ ‘யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன், நானே இதைச் செய்வேன்,’ ” என்றார்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings