உபாகமம் 20:10-18
10
ஒரு பட்டணத்தைத் தாக்குவதற்கு அணிவகுத்துச் செல்லும்போது, அதைக் நெருங்கியவுடன் அதன் மக்களுடன் சமாதானத்துக்கு வர முயற்சி செய்யுங்கள்.
11
அவர்கள் அதற்கு உடன்பட்டு தங்கள் வாசல்களைத் திறந்தால், அங்குள்ள யாவரும் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் உங்களுக்கு வேலைசெய்யவேண்டும்.
12
ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள்.
13
உங்கள் இறைவனாகிய யெகோவா அந்தப் பட்டணத்தை உங்களுக்குக் கொடுப்பார். அப்போது அங்குள்ள ஆண்கள் யாவரையும் வாளால் வெட்டிப்போடுங்கள்.
14
பட்டணத்திலுள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் உங்களுக்காக கொள்ளைப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளைப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
15
உங்களுக்குத் தூரத்திலுள்ள, எந்த நாட்டையும் சேராத பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் இப்படியே செய்யவேண்டும்.
16
ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாடுகளின் பட்டணங்களில் உள்ள உயிருள்ள எதையும், எவ்வழியிலும் தப்பவிடவேண்டாம்.
17
இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய எல்லோரையும் முற்றிலும் அழித்துவிடுங்கள்.
18
ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதால் செய்கிற அருவருப்பான செயல்களை நீங்கள் பின்பற்றும்படி உங்களுக்கும் போதிப்பார்கள். நீங்களும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்வீர்கள்.
Settings