Skip to content
அப்போஸ்தலர் 13:16-41

அப்போஸ்தலர் 13:16-41

16
பவுல் எழுந்து, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மக்களே, இறைவனுக்குப் பயப்படுகிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
17
இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது தந்தையரைத் தெரிந்துகொண்டார்; அவர் அந்த மக்களை, அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால், அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார்.
18
ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைவனத்திலே அவர்களின் நடத்தையைச் சகித்துக்கொண்டார்.
19
கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.
20
இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று. “இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார்.
21
பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது இறைவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுவின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தான்.
22
இறைவன் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார்.” இறைவன் தாவீதைக்குறித்து சாட்சியாக: “ஈசாயின் மகனான தாவீது என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன்; அவன் செய்யவேண்டும் என்று நான் விரும்பின எல்லாவற்றையும் அவன் செய்வான்” என்று சொன்னார்.
23
“தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார்.
24
இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் மனந்திரும்புதலைக்குறித்தும் திருமுழுக்கைக்குறித்தும் யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தான்.
25
யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப்பின் வருகிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’
26
“சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கிற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது.
27
எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும், இயேசுவை யாரெனப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததின் மூலம், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள்.
28
இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதுங்கூட, அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள்.
29
இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள்.
30
ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார்.
31
இயேசுவோடுகூட கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களுக்கு பல நாட்கள் அவர் காணப்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறார்கள்.
32
“நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை
33
இயேசுவை உயிருடன் எழுப்பியதாலேயே அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இது இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது: “ ‘நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’
34
அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து எழுப்பினார் என்ற உண்மை, இந்த வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது: “ ‘தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்தமானதும் நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.’
35
அப்படியே இது இன்னுமொரு இடத்தில், “ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
36
“தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது.
37
ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
38
“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்.
39
மோசேயினுடைய சட்டத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட முடியாதிருந்த எல்லாப் பாவங்களிலுமிருந்தும் விடுதலையாகி, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், அவர் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
40
ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
41
“ ‘பாருங்கள், ஏளனம் செய்வோரே! அதிசயப்பட்டு சிதறிப்போங்கள். ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன். அதை யாராவது உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் ஒருபோதும் நம்பமாட்டீர்கள்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options