2 இராஜாக்கள் 24:1-7
1
யோயாக்கீமின் ஆட்சியின் காலத்தில் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் யூதா நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தான்; அதனால் யோயாக்கீம் மூன்று வருடங்களுக்கு அவனுக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தான். ஆனால் பின்பு தன் மனதை மாற்றி நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்தான்.
2
யெகோவா யூதாவுக்கு எதிராக, கல்தேயா, சீரியா, மோவாப், அம்மோன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கொள்ளைக்கூட்டங்களை அனுப்பினார். இறைவனாகிய யெகோவா தனது அடியவனாகிய இறைவாக்கினன் மூலம் அனுப்பிய வார்த்தையின்படி, அவர் யூதாவை அழிப்பதற்காகவே இவர்களை அனுப்பினார்.
3
நிச்சயமாகவே மனாசேயின் பாவங்களுக்காகவும், அவன் செய்த எல்லாவற்றிற்காகவும் யெகோவாவின் கட்டளைப்படியே, யூதாவை தமது சமுகத்தைவிட்டு அகற்றுவதற்காக இவை யாவும் நடந்தன.
4
அவன் எருசலேம் முழுவதையும் குற்றமற்ற இரத்தத்தினால் நிரப்பியபடியாலும் யெகோவா மன்னிக்க மனதில்லாதிருந்தார்.
5
யோயாக்கீமின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
6
யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோயாக்கீன் அரசனானான்.
7
பாபிலோனிய அரசன் எகிப்தின் நீரோடையிலிருந்து யூப்ரட்டீஸ் ஆறுவரை எகிப்திய அரசனின் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றியபடியால், எகிப்து அரசன் தன் சொந்த நாட்டிலிருந்து மீண்டும் படையெடுக்கவில்லை.
Settings