Skip to content
2 நாளாகமம் 6:14-25

2 நாளாகமம் 6:14-25

14
அதன்பின் அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, வானத்திலும் பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை; உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே.
15
உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர்.
16
“இப்பொழுதும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, நீர் உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ என்முன் எனது சட்டத்தின்படி நடந்ததுபோல், உனது மகன்களும் அதின்படி நடக்க தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே.
17
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியானாகிய தாவீதுக்கு நீர் வாக்குப்பண்ணிய வார்த்தைகளை நிறைவேற்றும்.
18
“ஆனாலும் உண்மையாகவே இறைவன் பூமியில் மனிதனோடு வாழ்வாரோ? வானங்களும் வானாதி வானங்களும் உம்மை உள்ளடக்க முடியாதிருக்க, நான் கட்டிய இந்த ஆலயம் எம்மாத்திரம்!
19
என் இறைவனாகிய யெகோவாவே, உமது அடியவனாகிய என் மன்றாட்டையும், இரக்கத்திற்கான வேண்டுதலையும் கவனித்துக் கேளும்; உமது அடியவன் உமது சமுகத்தில் மன்றாடும் கதறுதலையும் விண்ணப்பத்தையும் கேட்பீராக.
20
உமது பெயர் விளங்குமென்று நீர் சொன்ன இடமான இந்த ஆலயத்தை, உமது கண்கள் இரவும் பகலும் நோக்குவதாக. இந்த இடத்தை நோக்கி, உமது அடியேன் செய்யும் மன்றாட்டை நீர் கேட்பீராக.
21
இந்த இடத்தை நோக்கி உமது அடியவனும், உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரும் மன்றாடும்போது, எங்களுடைய விண்ணப்பத்தைக் கேளும். உம்முடைய உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேளும்; நீர் கேட்கும்போது மன்னியும்.
22
“ஒரு மனிதன் தன் அயலானுக்கு தவறு செய்திருக்கையில், அவன் ஆணையிடும்படி கேட்கப்பட்டால், அவன் வந்து இந்த ஆலயத்தில் உமது பலிபீடத்தின்முன் ஆணையிட்டால்,
23
அப்பொழுது நீர் வானத்திலிருந்து கேட்டு நியாயம் செய்யும். குற்றம் செய்தவனுக்கு அவன் செய்ததற்கேற்ற தண்டனையை அவன் தலைமேல் வரப்பண்ணி, உமது அடியவருக்கு இடையில் நியாயம் செய்யும். குற்றமற்றவனை குற்றமற்றவன் என்று அவனுடைய குற்றமின்மையை நிலைநாட்டும்.
24
“உமது மக்களாகிய இஸ்ரயேலர், உமக்கு எதிராக பாவம் செய்ததினால், பகைவர்களால் தோற்கடிக்கப்படலாம். அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி உமது பெயரை அறிக்கையிட்டு, இந்த ஆலயத்தில் உம்மிடம் மன்றாடி, விண்ணப்பம் செய்யும்போது,
25
பரலோகத்திலிருந்து கேட்டு உமது மக்களாகிய இஸ்ரயேலின் பாவத்தை மன்னியும். நீர் அவர்களுக்கும், அவர்கள் முற்பிதாக்களுக்கும் கொடுத்த நாட்டிற்குத் திரும்பவும் அவர்களைக் கொண்டுவாரும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options