Skip to content
2 நாளாகமம் 33:11-25

2 நாளாகமம் 33:11-25

11
எனவே யெகோவா அசீரிய அரசனின் இராணுவ தளபதிகளை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தார். அவர்கள் மனாசேயை கைதியாக்கி, அவனுடைய மூக்கில் கொக்கியை மாட்டி, வெண்கல சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
12
அவன் தனது கடும் துன்பத்தில் தனது இறைவனாகிய யெகோவாவிடத்தில் தயவைத் தேடினான். தன் முற்பிதாக்களின் இறைவனுக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்தினான்.
13
அவன் அவரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, யெகோவா அவனுடைய வேண்டுதலினால் மனமிரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். அவர் அவனைத் திரும்பவும் எருசலேமுக்கும் அவனுடைய அரசுக்கும் கொண்டுவந்தார். அதன்பின்பு மனாசே யெகோவாவே இறைவன் என அறிந்தான்.
14
இவற்றிற்குப்பின் அவன் தாவீதின் நகரத்தில் வெளி மதிலைத் திரும்பக் கட்டினான். கீகோனுக்கு மேற்கேயுள்ள பள்ளத்தாக்கின் நீரூற்று தொடங்கி, மீன் வாசலின் நுழைவாசல்வரை ஓபேலின் குன்றைச் சுற்றியே அந்த மதிலைக் கட்டினான். அவன் அதை முன்னிருந்ததைவிட உயரமாகக் கட்டினான். அவன் யூதாவின் எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவ தளபதிகளை நிறுத்தினான்.
15
அவன் அந்நிய தெய்வங்களையெல்லாம் ஒழித்து, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த உருவச்சிலையை அகற்றிப்போட்டான். அதேபோல் ஆலய மலையிலும், எருசலேமிலும் தான் கட்டியிருந்த பலிபீடங்களையும் அகற்றிப்போட்டான். அவன் அவற்றை பட்டணத்திற்கு வெளியே எறிந்துவிட்டான்.
16
அதன்பின் யெகோவாவின் பலிபீடத்தைத் திரும்பவும் கட்டி, அதில் சமாதானக் காணிக்கைகளையும், நன்றி செலுத்தும் காணிக்கைகளையும் பலியிட்டான். அத்துடன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும் என யூதா மக்களிடம் சொன்னான்.
17
இருந்தும் மக்கள் தொடர்ந்து பலிபீடங்களின் மேலேயே பலியிட்டு வந்தனர். ஆனாலும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்கு என்றே பலியிட்டார்கள்.
18
மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் தனது இறைவனிடம் செய்த மன்றாடலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் தரிசனக்காரர் அவனுடன் பேசிய வார்த்தைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
19
அவனுடைய மன்றாடலும், அவனுடைய வேண்டுதலினால் இறைவன் எவ்விதம் அவனுக்கு இரங்கினார் என்பதும், அவனுடைய பாவங்களும், நம்பிக்கைத் துரோகமும், அவன் தன்னைத் தாழ்த்துவதற்கு முன்பு உயர்ந்த மேடைகளைக் கட்டி, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் அமைத்த இடங்களுமான இவையெல்லாம் தரிசனக்காரரின் பதிவேடுகளில் எழுதப்பட்டுள்ளன.
20
மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து அரண்மனையில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆமோன் அவனுடைய இடத்தில் அரசனானான்.
21
ஆமோன் அரசனானபோது அவன் இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
22
அவனும் தன் தகப்பன் மனாசே செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதையே செய்தான். மனாசே செய்திருந்த எல்லா விக்கிரகங்களையும் ஆமோன் வணங்கி, அவற்றில் பலிகளையும் செலுத்தினான்.
23
ஆனால் தன் தகப்பன் மனாசேயைப்போல் யெகோவாவுக்குமுன் தன்னைத் தாழ்த்தவில்லை. ஆமோன் தன் குற்றத்தை அதிகரித்துக் கொண்டான்.
24
ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அவனுடைய அரண்மனையில் அவனைக் கொலைசெய்தார்கள்.
25
அப்பொழுது நாட்டு மக்கள், அரசன் ஆமோனுக்கெதிராக குழப்பம் செய்த எல்லோரையும் கொலைசெய்தார்கள். பின் அவனுடைய இடத்திற்கு அவன் மகன் யோசியாவை அரசனாக்கினார்கள்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options