1 இராஜாக்கள் 3:16-28
16
சில நாட்களின்பின் இரண்டு வேசிகள் அரசனுக்கு முன்வந்து நின்றார்கள்.
17
அவர்களில் ஒருத்தி, “என் ஆண்டவனே, இந்தப் பெண்ணும், நானும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். அவள் என்னோடு இருக்கையில் எனக்கு ஒரு பிள்ளை பிறந்தது.
18
எனது பிள்ளை பிறந்து மூன்றாம் நாளில் இந்தப் பெண்ணுக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. நாங்கள் தனிமையாகவே இருந்தோம். எங்கள் இருவரையும் தவிர வீட்டில் எவருமே இருக்கவில்லை.
19
“இரவு நேரத்தில், இவள் தன் பிள்ளையின்மேல் புரண்டு படுத்ததினால் இவளின் மகன் இறந்துபோனான்.
20
எனவே இவள் நள்ளிரவில் எழுந்து உமது அடியாளாகிய நான் நித்திரையிலிருந்தபோது, என் பக்கத்தில் இருந்த என் மகனை எடுத்துக்கொண்டாள். அவள் அவனைத் தன் மார்பில் போட்டுக்கொண்டு, தன்னுடைய இறந்த மகனை என் மார்பில் போட்டுவிட்டாள்.
21
அதிகாலையில் என் மகனுக்குப் பால் கொடுக்க நான் எழுந்தபோது, அவன் இறந்து கிடந்தான். காலை வெளிச்சத்தில் அவனை நான் கூர்ந்து பார்த்தபோது, அது நான் பெற்ற என் மகனல்ல என்று கண்டேன்” என்று கூறினாள்.
22
அப்பொழுது மற்றப் பெண் அவளைப் பார்த்து, “இல்லை; உயிரோடிருப்பவன் என்னுடையவன். இறந்தவன் உன்னுடையவன்” என்றாள். ஆனால் முதற்பெண்ணோ வற்புறுத்தி, “இல்லை இறந்தவனே உன்னுடைய மகன்; உயிரோடிருப்பவன் என் மகன்” என அரசனின் முன்பாக வாக்குவாதம் செய்தாள்.
23
அப்பொழுது அரசன், “இவள், ‘என் மகனே உயிரோடிருக்கிறான்; உன் மகன் இறந்துவிட்டான்’ என்கிறாள். மற்றவளோ, ‘இல்லை, உன் மகன் இறந்துவிட்டான்; என் மகனே உயிரோடிருக்கிறான்’ என்கிறாள்.”
24
ஆகவே, “ஒரு வாளை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். எனவே அவர்கள் அரசனுக்கு ஒரு வாளைக் கொண்டுவந்தார்கள்.
25
அப்பொழுது அரசன், “உயிரோடிருக்கும் பிள்ளையை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை ஒருத்திக்கும், மறு பாதியை மற்றவளுக்கும் கொடுங்கள்” எனக் கட்டளையிட்டான்.
26
அப்பொழுது உயிரோடிருக்கும் பிள்ளையின் சொந்தத் தாய் தன் பிள்ளைக்காக மிகவும் இரக்கப்பட்டு, அரசனை நோக்கி, “ஆண்டவனே! தயவுசெய்து உயிரோடிருக்கும் பிள்ளையை அவளுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம்” என்றாள். ஆனால் மற்றவளோவென்றால், “அந்தப் பிள்ளை எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம். அவனை இரண்டாக வெட்டும்” என்றாள்.
27
அப்பொழுது அரசன் இந்தத் தீர்ப்பை வழங்கினான்: “உயிரோடிருக்கும் பிள்ளையை முதலாவது வந்த பெண்ணுக்கே கொடுங்கள். அவனைக் கொல்லவேண்டாம். அவளே அவனின் சொந்தத் தாய்” என்றான்.
28
அரசன் கொடுத்த தீர்ப்பை இஸ்ரயேலர் அனைவரும் கேட்டபோது, அவனை உயர்வாய் மதித்தார்கள். நீதியாய் நிர்வாகம் செய்ய இறைவனிடமிருந்து வந்த அவனுடைய ஞானத்தைக் கண்டார்கள்.
Settings