Skip to content
1 இராஜாக்கள் 21:1-7

1 இராஜாக்கள் 21:1-7

1
சில நாட்களுக்குபின் யெஸ்ரயேல் ஊரைச்சேர்ந்த நாபோத்துக்கு உரிமையான திராட்சைத் தோட்டத்திற்கு தொடர்பாக ஒரு சம்பவம் நடந்தது. அந்த திராட்சைத் தோட்டம் யெஸ்ரயேலில் சமாரிய அரசனாகிய ஆகாபின் அரண்மனைக்கு அருகே இருந்தது.
2
ஆகாப் நாபோத்தைப் பார்த்து, “உனது திராட்சைத் தோட்டம் என் அரண்மனைக்குப் பக்கத்தில் இருப்பதால் அதை எனக்கு கீரைத்தோட்டம் போடுவதற்காகத் கொடு. அதற்குப் பதிலாக அதைக்காட்டிலும் திறமையான ஒரு திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருகிறேன் அல்லது நீ விரும்பினால் அதற்கான பணத்தை உனக்குத் தருகிறேன்” என்றான்.
3
ஆனால் நாபோத்தோ, “என் முற்பிதாக்களுடைய உரிமைச்சொத்தை நான் உமக்கு விற்றுப்போடாதபடி யெகோவா என்னைத் தடைசெய்வாராக” என்றான்.
4
யெஸ்ரயேலனாகிய நாபோத், “முற்பிதாக்களின் உரிமைச் சொத்தைத் தரமாட்டேன்” என்று சொன்னதினால், ஆகாப் ஆத்திரம் கொண்டவனாய்த் தன் வீட்டுக்குப் போனான். அவன் யாருடனும் பேசாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு சாப்பிடுவதற்கும் மறுத்துவிட்டான்.
5
அப்பொழுது அவனுடைய மனைவி யேசபேல் உள்ளே வந்து, “ஏன் யாருடனும் பேசாமல் இருக்கிறீர்? ஏன் சாப்பிடாமல் ஆழ்ந்த துயரத்துடன் இருக்கிறீர்?” என்று கேட்டாள்.
6
ஆகாப் அவளைப் பார்த்து, “நான் யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்திடம், ‘உன்னுடைய திராட்சைத் தோட்டத்தை பணத்திற்கு எனக்கு விற்று விடு. அல்லது அதற்குப் பதிலாக நீ விரும்பினால் இன்னொரு திராட்சைத் தோட்டத்தைத் தருவேன்’ என்று கேட்டுப் பார்த்தேன். அவன் அதற்கு, ‘நான் என்னுடைய திராட்சைத் தோட்டத்தைத் தரமாட்டேன்’ என்று கூறி விட்டான்” என்றான்.
7
அதற்கு அவன் மனைவி யேசபேல், “நீர் இஸ்ரயேலின் அரசனல்லவா? இப்படித்தான் நடந்துகொள்வதா? எழுந்து சாப்பிடும், சந்தோஷமாயிரும். யெஸ்ரயேல் ஊரானாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் உமக்கு எடுத்துத்தருவேன்” என்றாள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options