Skip to content
1 கொரிந்தியர் 9:1-14

1 கொரிந்தியர் 9:1-14

1
நான் ஒரு சுதந்திரமுடைய மனிதன் அல்லவா? நான் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நான் காணவில்லையா? நான் கர்த்தரில் செய்த ஊழியத்தின் கிரியையாய் நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவோ?
2
நான் மற்றவர்களுக்கு ஒருவேளை அப்போஸ்தலனாய் இல்லாதிருக்கலாம். ஆனால் நிச்சயமாக, உங்களுக்கு, நான் அப்போஸ்தலன்தான்; ஏனெனில், கர்த்தரில் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கிறீர்கள்.
3
என்மேல் நியாயந்தீர்க்கிறவர்களுக்கு, நான் கொடுக்கும் பதில் இதுவே.
4
உணவையும் பானத்தையும் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உரிமை எங்களுக்கு இல்லையோ?
5
மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் அவனவன் விசுவாசியான தன்தன் மனைவியைக் கூட்டிக் கொண்டுபோகிறதுபோல், நாங்களும் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை இல்லையோ?
6
அல்லது வாழ்க்கைச் செலவுக்காக நானும் பர்னபாவும் மட்டும்தான் வேலைசெய்ய வேண்டுமோ?
7
எவன் தன் செலவுக்கான பணத்தைத் தானே செலுத்தி படைவீரனாய்ப் பணிபுரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களைச் சாப்பிடாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்?
8
இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கிறேனோ? மோசேயின் சட்டமும் இதைச் சொல்லவில்லையா?
9
“தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்று மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறதே. இவைகளை மாடுகளைக்குறித்தா, இறைவன் கவலைப்படுகிறார்?
10
நிச்சயமாக இதை அவர் நமக்காகத்தான் சொல்லியிருக்கிறார். ஆம், அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகிறவனும், போரடிக்கிறவனும் விளைச்சலில் தங்களுக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வோம் என்ற எதிர்பார்ப்பில்தானே தங்கள் வேலையைச் செய்யவேண்டும்.
11
நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரிய விதையை விதைத்தோமே. அப்படியிருக்க, உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையானவற்றை அறுவடை செய்வது நியாயமற்றதோ?
12
உங்களிடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உரிமை இருக்குமாயின், எங்களுக்கு இன்னும் அதிகமான உரிமை இருக்காதோ? அப்படியிருந்தும், இந்த உரிமையை நாங்கள் உபயோகிக்கவில்லை. மாறாக நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு, எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
13
ஆலயத்தில் ஊழியம் செய்கிறவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணிசெய்கிறவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா?
14
அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options