Skip to content
1 நாளாகமம் 15:2-15

1 நாளாகமம் 15:2-15

2
பின்னர் தாவீது, “லேவியரைத்தவிர வேறு யாரும் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டியை சுமக்கக்கூடாது. ஏனெனில் யெகோவா தனது உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்காகவும், தனக்கு முன் எப்பொழுதும் பணி செய்தவற்காகவும் அவர்களையே தெரிந்தெடுத்திருக்கிறார்” எனச் சொன்னான்.
3
தாவீது யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தான் ஆயத்தப்படுத்தியிருந்த இடத்திற்கு கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலர் எல்லோரையும் எருசலேமில் ஒன்றுகூட்டினான்.
4
அத்துடன் தாவீது ஆரோனுடைய, லேவியருடைய சந்ததிகளையும் ஒன்றுகூடும்படி அழைத்தான்.
5
கோகாத்தின் சந்ததிகளிலிருந்து ஊரியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 120 பேரும்;
6
மெராரியின் சந்ததிகளில் இருந்து அசாயா என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 20 பேரும்;
7
கெர்சோமின் சந்ததிகளிலிருந்து யோயேல் என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 130 பேரும்;
8
எலிசாபானின் சந்ததிகளிலிருந்து செமாயா என்னும் தலைவனும் அவனுடைய உறவினர்கள் 200 பேரும்;
9
எப்ரோனின் சந்ததிகளிலிருந்து எலியேல் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 80 பேரும்;
10
ஊசியேலின் சந்ததிகளிலிருந்து அம்மினதாப் என்னும் தலைவனும், அவனுடைய உறவினர்கள் 122 பேரும் அங்கு அழைக்கப்பட்டனர்.
11
பின்பு தாவீது ஆசாரியர்களாகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியர்களாகிய ஊரியேல், அசாயா, யோயேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்தான்.
12
அவன் அவர்களிடம், “நீங்கள் லேவிய குடும்பங்களின் தலைவர்கள்; நீங்களும் உங்களுடன் ஒத்த மற்ற லேவியர்களும் உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை அதற்காக நான் ஆயத்தப்படுத்திய இடத்திற்குக் கொண்டுவாருங்கள்.
13
முதல்முறை லேவியராகிய நீங்கள் அதைக் கொண்டுவராததினால்தான், எங்கள் இறைவனாகிய யெகோவா தனது கோபத்தை நம்மேல் வரப்பண்ணினார். நாம் முறையான வழியில் எப்படிச் செய்வதென அவரிடம் விசாரியாது போனோம்” என்றான்.
14
எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காகத் தங்களைத் பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள்.
15
லேவியர்கள் யெகோவாவின் வார்த்தைப்படி, மோசே கட்டளையிட்டவாறு இறைவனின் பெட்டியைத் தாங்கும் கம்புகளைத் தோளில் வைத்துப் பெட்டியைச் சுமந்து வந்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options