சங்கீதம் 74:1-11
1
மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம். இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்? உமது கோபம் உமது மேய்ச்சல் நிலத்தின் செம்மறியாடுகளுக்கு விரோதமாக ஏன் புகைகிறது?
2
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும், நீர் மீட்டுக்கொண்ட உமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் நினைவிற்கொள்ளும்; உமது தங்குமிடமான சீயோன் மலையையும் நினைவிற்கொள்ளும்.
3
என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்; எதிரி பரிசுத்த இடத்திற்குள் அனைத்தையும் பாழாக்கிவிட்டான்.
4
நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்; அவர்கள் தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள்.
5
அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு கோடாரிகளைக் கையாளும் மனிதரைப்போல் அவர்கள் நடந்துகொண்டார்கள்.
6
அவர்கள் தங்கள் கோடாரிகளாலும், கைக்கோடரிகளாலும் சித்திரவேலைகள் எல்லாவற்றையும் அழித்தார்கள்.
7
அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய தங்குமிடத்தை அசுத்தமாக்கினார்கள்.
8
அவர்கள் தங்கள் இருதயங்களில், “நாங்கள் அவர்களை அடியோடு அழித்துவிடுவோம்!” என்றார்கள்; நாட்டில் இறைவனை வழிபட்ட எல்லா இடங்களையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள்.
9
எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை; இறைவாக்கினரும் இல்லை; இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் எங்களில் யாருக்கும் தெரியாது.
10
இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்? எதிரி உமது பெயரை என்றென்றும் உதறித் தள்ளிவிடுவானோ?
11
நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்? மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும்.
Settings