எண்ணாகமம் 3:5-13
5
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
6
“ஆசாரியன் ஆரோனுக்கு உதவிசெய்யும்படி லேவி கோத்திரத்தாரை அவனுக்கு முன் அழைத்து வா.
7
அவர்கள் சபைக் கூடாரத்தில், இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்து, அவனுக்காகவும், முழு சமுதாயத்திற்காகவும் கடமைகளைச் செய்யவேண்டும்.
8
அவர்கள் சபைக் கூடாரத்தின் பொருட்கள் எல்லாவற்றையும் பராமரித்து, இறைசமுகக் கூடாரத்தின் வேலைகளைச் செய்வதினால் இஸ்ரயேலின் கடமைகளையும் நிறைவேற்றவேண்டும்.
9
ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் உதவியாக லேவியரைக் கொடுக்கவேண்டும். அவனுக்கு அர்ப்பணமாய்க் கொடுக்கப்படவேண்டிய இஸ்ரயேலர்கள் இவர்களே.
10
ஆரோனையும், அவன் மகன்களையும் குருத்துவப் பணிசெய்யும்படி நியமிக்கவேண்டும். பரிசுத்த இடத்தை நெருங்கும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும்” என்றார்.
11
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
12
“ஒவ்வொரு இஸ்ரயேல் பெண்களுக்கும் கர்ப்பந்திறந்து பிறக்கும் மூத்த ஆண்பிள்ளைக்குப் பதிலாக இஸ்ரயேலருக்குள் இருந்து நான் லேவியரைத் தெரிந்துகொண்டேன். இந்த லேவியர் எனக்குரியவர்கள்.
13
ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.
Settings