Skip to content
எண்ணாகமம் 28:5-15

எண்ணாகமம் 28:5-15

5
அவற்றுடன் பத்தில் ஒரு பங்கு எப்பா அளவான மாவுடன், நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயைவிட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
6
இதுவே சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்ட வழக்கமான தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கை.
7
ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும் சேர்த்துச் செலுத்தப்படும் பானகாணிக்கை, நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான திராட்சைரசமாயிருக்க வேண்டும். இந்தப் பானகாணிக்கையைப் பரிசுத்த இடத்தில் யெகோவாவுக்காக ஊற்றுங்கள்.
8
இரண்டாவது செம்மறியாட்டுக் குட்டியை, காலையில் செலுத்தியதுபோன்று அதேவிதமான தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் பொழுதுபடும் வேளையில் செலுத்துங்கள். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும்.
9
“ ‘ஓய்வுநாளில் ஒரு வயதுடைய குறைபாடற்ற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளைக் காணிக்கையாகச் செலுத்துங்கள். அவற்றுடன், அதற்குரிய பானகாணிக்கையையும் செலுத்தி, பத்தில் இரண்டு எப்பா அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த, சிறந்த மாவைக்கொண்ட தானிய காணிக்கையையும் செலுத்துங்கள்.
10
இதுவே வழக்கமாக கொடுக்கப்படும் தகன காணிக்கையுடனும், அதன் பானகாணிக்கையுடனும் வழக்கமாக ஒவ்வொரு ஓய்வுநாளிலும் செலுத்தப்படவேண்டிய தகன காணிக்கை ஆகும்.
11
“ ‘ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளான அமாவாசை தினத்தில், இரண்டு இளங்காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
12
ஒவ்வொரு காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடன் பத்தில் இரண்டு பங்கு எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசையப்பட்ட, தானிய காணிக்கை கொடுக்கவேண்டும்.
13
ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும், பத்தில் ஒரு பங்கு எப்பா அளவு தரமான மாவில் எண்ணெய்விட்டுப் பிசையப்பட்ட தானிய காணிக்கையையும் செலுத்தவேண்டும். இது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு தகன காணிக்கை.
14
ஒவ்வொரு காளையுடனும் இரண்டில் ஒரு ஹின் அளவு திராட்சை இரசமும், செம்மறியாட்டுக் கடாவுடன் மூன்றில் ஒரு ஹின் அளவு திராட்சை இரசமும், ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும் நாலில் ஒரு ஹின் அளவு திராட்சை இரசமும் பானகாணிக்கையாகச் செலுத்தவேண்டும். வருடத்தின் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் செலுத்தப்படவேண்டிய மாதாந்திர தகன காணிக்கை இதுவே.
15
வழக்கமான தகன காணிக்கையையும், அதற்குரிய பானகாணிக்கையையும் தவிர, ஒரு வெள்ளாட்டுக் கடாவும் யெகோவாவுக்குப் பாவநிவாரண காணிக்கையாகச் செலுத்தப்பட வேண்டும்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options