எண்ணாகமம் 27:12-23
12
பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அபாரீம் மலைத்தொடரிலுள்ள இம்மலையின் மேல் ஏறிப்போய், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கும் நாட்டைப் பார்.
13
நீ அதைப் பார்த்தபின், உன் சகோதரன் ஆரோனைப்போல், நீயும் உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.
14
ஏனென்றால், சீன் பாலைவனத்தின் தண்ணீரின் அருகே இந்த மக்கள் கலகம் பண்ணியபொழுது, அவர்களுக்குமுன் என்னைப் பரிசுத்தர் என்று கனம்பண்ணும்படி உங்களுக்குக் நான் கொடுத்த கட்டளைக்கு நீங்கள் இருவருமே கீழ்ப்படியவில்லை” என்றார். சீன் பாலைவனத்திலுள்ள காதேஸ் என்ற இடத்தில் உண்டான மேரிபாவின் தண்ணீரைப் பற்றியே இது சொல்லப்பட்டது.
15
மோசே யெகோவாவிடம் சொன்னதாவது,
16
“முழு மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனாகிய யெகோவா இந்த மக்கள் சமுதாயத்தின் மேலாக ஒரு மனிதனை நியமிப்பாராக!
17
யெகோவாவின் மக்கள் மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளைப்போல் இராதபடி அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லவும், உள்ளே கொண்டுவரவும் அவனை நியமிப்பாராக” என்றான்.
18
எனவே யெகோவா மோசேயிடம், “நூனின் மகனும், ஆவியானவரைப் பெற்றிருக்கிறவனுமாகிய யோசுவாவைத் தெரிந்தெடுத்து, அவன்மேல் உன் கையை வை.
19
ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாகவும், சபையார் எல்லோருக்கும் முன்பாகவும், அவனை நிறுத்தி, அவர்கள் முன்னிலையில் அவனுக்குத் தலைமைப்பொறுப்பைக் கொடு.
20
இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவனுக்குக் கீழ்ப்படியும்படியாக உன் அதிகாரத்தில் ஒரளவை அவனுக்குக் கொடு.
21
அவன் ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும். யோசுவா செய்யவேண்டிய தீர்மானங்களை எலெயாசார், யெகோவாவிடம் ஊரீம் மூலமாக விசாரித்து அறிவான். யோசுவாவின் கட்டளைப்படியே, அவனுடன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தாரும் வெளியே போவார்கள். அவனுடைய கட்டளைப்படியே அவர்கள் உள்ளே வருவார்கள்” என்றார்.
22
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். அவன் ஆசாரியன் எலெயாசார் முன்பாகவும், முழுசபையார் முன்பாகவும் யோசுவாவைக் கூட்டிக்கொண்டுபோய் நிறுத்தினான்.
23
பின்பு மோசே யெகோவா தனக்கு அறிவுறுத்தியபடியே யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்து, தலைமைப்பொறுப்பை அவனிடத்தில் கொடுத்தான்.
Settings