நெகேமியா 8:13-18
13
அதே மாதத்தின் இரண்டாம் நாளில் எல்லா குடும்பங்களிலுமுள்ள தலைவர்களும் ஆசாரியருடனும், லேவியருடனும் ஒன்றுசேர்ந்து சட்டத்தின் வார்த்தைகளைக் கவனமாய் கேட்கும்படி, சட்ட ஆசிரியர் எஸ்றாவைச் சுற்றி ஒன்றுகூடினார்கள்.
14
ஏழாம் மாதத்தின் பண்டிகையைக் கொண்டாடும்போது, இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களிலேயே வாழவேண்டும் என்று மோசேயைக் கொண்டு யெகோவா கட்டளையிட்டிருந்ததாக சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்.
15
அத்துடன் எழுதியிருக்கிறபடி மக்கள் மலைநாட்டிற்குப் போய் ஒலிவமரம், காட்டொலிவமரம், மிருதுச்செடி, பேரீட்சைமரம், அத்திமரம் ஆகியவற்றின் மரக்கொப்புகளை எடுக்கவேண்டும் எனவும், அவற்றினால் கூடாரங்களை அமைக்கும்படி எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் எனவும் அறிந்துகொண்டார்கள்.
16
மக்கள் வெளியே போய், மரக்கொப்புகளைக் கொண்டுவந்து அவற்றினால் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள்; அவர்கள் வீட்டுக் கூரைகளின்மேலும், வீட்டு முற்றங்களிலும், இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், தண்ணீர்வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும், எப்பிராயீம் வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள்.
17
நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த மக்கள் கூட்டம் முழுவதும் கூடாரங்களைக் கட்டி அங்கே வாழ்ந்தார்கள். நூனின் மகன் யோசுவாவின் நாட்களிலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதமாகப் பண்டிகையைக் கொண்டாடவில்லை. இப்போதோ அவர்களுடைய மகிழ்ச்சி மிக அதிகமாயிருந்தது.
18
முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை ஒவ்வொரு நாளும் இறைவனின் சட்டப் புத்தகத்திலிருந்து எஸ்றா வாசித்தான். ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். எட்டாம் நாளில் சட்ட ஒழுங்குவிதியின்படி எல்லோரும் சபைகூடினார்கள்.
Settings