லேவியராகமம் 14:1-13
1
யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது:
2
“நோயுற்ற ஒருவன் ஆசாரியனிடம் கொண்டுவரப்படும்போது, சம்பிரதாய முறைப்படி அவன் சுத்திகரிக்கப்படும் வேளையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இவையே:
3
ஆசாரியன் முகாமுக்கு வெளியே சென்று அவனைப் பரிசோதிக்க வேண்டும். அந்த நோயாளி தனது தொற்றும் தோல்வியாதியிலிருந்து குணமடைந்திருந்தால்,
4
ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனுக்காக இரண்டு சுத்தமான உயிருள்ள பறவைகளையும், சில கேதுருமரத்தின் கட்டைகளையும், சிவப்புநூல் கற்றைகளையும், ஈசோப்புக் குழையையும் கொண்டுவரும்படி உத்தரவிடவேண்டும்.
5
பின்பு ஒரு மண்பானையிலுள்ள நல்ல தண்ணீரின் மேலாக அந்த பறவைகளில் ஒன்று கொல்லப்படும்படி ஆசாரியன் உத்தரவிடவேண்டும்.
6
அவன் கேதுருமரக்கட்டை, சிவப்புநூல் கற்றை, ஈசோப்புக்குழை ஆகியவற்றுடன் உயிரோடிருக்கும் மற்றப் பறவையையும் எடுத்து, நல்ல தண்ணீரின் மேலாகக் கொல்லப்பட்ட பறவையின் இரத்தத்தில் அதைத் தோய்க்க வேண்டும்.
7
ஆசாரியன், தொற்று வியாதியிலிருந்து சுத்திகரிக்கப்பட வேண்டியவன்மேல், ஏழுமுறை இரத்தத்தைத் தெளித்து, அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கவேண்டும். அதன்பின் அந்த உயிருள்ள பறவையைத் திறந்த வெளியிலே விட்டுவிட வேண்டும்.
8
“சுத்தமாக்கப்பட வேண்டியவன் தன் உடைகளைக் கழுவி, தலைமயிர் முழுவதையும் சிரைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். அப்பொழுது அவன் சம்பிரதாய முறைப்படி சுத்தமாயிருப்பான். இதன்பின் அவன் தனது முகாமுக்கு வரலாம். ஆனாலும் ஏழுநாட்களுக்கு அவன் தன் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருக்கவேண்டும்.
9
அவன் ஏழாம்நாளில் தன் மயிர் முழுவதையும் சிரைக்கவேண்டும். தலை, தாடி, புருவம் ஆகியவற்றிலுள்ள உரோமங்களையும், மற்ற இடங்களிலுள்ள உரோமங்களையும் சிரைக்கவேண்டும். தன் உடைகளைத் தண்ணீரில் கழுவி, முழுகவேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாவான்.
10
“எட்டாம் நாளிலே அவன் குறைபாடற்ற இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளையும், ஒரு வயதுடைய குறைபாடற்ற ஒரு பெண் செம்மறியாட்டுக் குட்டியையும், ஒரு எப்பா அளவையில் பத்தில் மூன்று பங்கு சிறந்த மாவை எண்ணெய் சேர்த்துப் பிசைந்து அத்துடன் தானியக் காணிக்கையாக ஒரு ஆழாக்கு ஒலிவ எண்ணெயையும் கொண்டுவர வேண்டும்.
11
அவனைச் சுத்தமானவன் என அறிவிக்கும் ஆசாரியன் சுத்திகரிக்கப்பட வேண்டியவனையும், அவனுடைய காணிக்கைகளையும் சபைக்கூடார வாசலில் யெகோவா முன்னிலையில் கொண்டுவர வேண்டும்.
12
“பின்பு ஆசாரியன் இரண்டு ஆண் செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒன்றை ஒரு ஆழாக்கு எண்ணெயுடன் குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதை யெகோவா முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும்.
13
பாவநிவாரண காணிக்கை மிருகமும், தகன காணிக்கை மிருகமும் கொல்லப்பட்ட பரிசுத்த இடத்திலேயே, ஆசாரியன் அந்தச் செம்மறியாட்டுக் குட்டியை வெட்டிக் கொல்லவேண்டும். பாவநிவாரண காணிக்கையைப்போலவே குற்றநிவாரண காணிக்கையும் ஆசாரியனுக்கே உரியது. அது மிகவும் பரிசுத்தமானது.
Settings