Skip to content
யோசுவா 7:16-26

யோசுவா 7:16-26

16
அவ்வாறே அதிகாலையில் யோசுவா இஸ்ரயேல் மக்களைக் கோத்திரம் கோத்திரமாக யெகோவா முன்பாக வரச்செய்தான். அப்பொழுது யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
17
பின் யூதாவின் கோத்திரம் வம்சம் வம்சமாக முன்னே வந்தபோது, யெகோவா சேராகியரின் வம்சத்தைத் தெரிந்தெடுத்தார். யோசுவா சேராகியரின் வம்சத்தைக் குடும்பமாக முன்னே வரச்செய்தபோது, சிம்ரியின் குடும்பம் குறிக்கப்பட்டது.
18
யோசுவா சிம்ரியின் குடும்பத்தில் ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியே முன் வரச்செய்தபோது, கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். கர்மீ சிம்ரியின் மகன். சிம்ரி யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகன்.
19
அப்பொழுது யோசுவா ஆகானிடம், “என் மகனே, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு மகிமைசெலுத்தி அவரைத் துதி, நீ செய்த காரியத்தை ஒளிக்காமல் எனக்கு சொல்” என்றான்.
20
ஆகான் யோசுவாவிற்கு மறுமொழியாக, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நான் பாவம் செய்தது உண்மையே. நான் செய்தது இதுவே:
21
கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு அழகான பாபிலோனிய அங்கியையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் நிறையுள்ள ஒரு தங்கப்பாளத்தையும் கண்டேன். அவற்றின்மேல் நான் பேராசைகொண்டு அவற்றை எடுத்துக்கொண்டேன். அவை என்னுடைய கூடார நிலத்திற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளி அடியில் இருக்கிறது” என்றான்.
22
யோசுவா ஏவலாளர்களை அங்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்துக்கு ஓடி அங்கு பார்த்தபோது, அவை அங்கே கூடாரத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வெள்ளி அடியில் இருந்தது.
23
அவர்கள் கூடாரத்திற்குள் இருந்து அந்த பொருட்களை எடுத்து யோசுவாவிடத்திலும், எல்லா இஸ்ரயேலர்களிடத்திலும் கொண்டுவந்து, அவைகளை யெகோவாவின் முன்பாகப் பரப்பிவைத்தார்கள்.
24
அப்பொழுது யோசுவாவும், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் சேராகின் மகனாகிய ஆகானை ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அவன் எடுத்திருந்த வெள்ளியும், மேலங்கியும், தங்கப்பாளமும் அவனுடன் எடுத்துச்செல்லப்பட்டன. அவனுடைய மகன்களையும், மகள்களையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும், செம்மறியாடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கொண்டுபோனார்கள்.
25
யோசுவா ஆகானிடம், “நீ எங்கள்மேல் ஏன் இத்தகைய துன்பத்தைக் கொண்டுவந்தாய்? யெகோவா இன்று உன்மேல் துன்பத்தைக் கொண்டுவருவார்” என்றான். இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் ஆகானையும் அவன் குடும்பத்தாரையும் கல்லால் எறிந்து கொன்றார்கள். அதன்பின் அவர்களை உடமைகள் எல்லாவற்றுடனும் சேர்த்து எரித்தார்கள்.
26
அவர்கள் ஆகான்மேல் ஒரு கற்குவியலை எழுப்பினார்கள். அது இன்றும் அங்கு இருக்கின்றது. அதன்பின் யெகோவா தன் கோபத்தை தணித்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை அது ஆகோர் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options