யோவான் 7:25-31
25
அப்பொழுது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இந்த மனிதனையல்லவா அவர்கள் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்?
26
இதோ இங்கே இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள் இவர்தான் கிறிஸ்து என்று உண்மையாகவே அறிந்துகொண்டார்களோ?
27
ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் கிறிஸ்து வரும்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாதே” என்று பேசத் தொடங்கினார்கள்.
28
அப்பொழுது தொடர்ந்து ஆலய முற்றத்தில் போதித்துக்கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை.
29
நானோ பிதாவை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினவர்” என்றார்.
30
அப்பொழுது அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
31
ஆனால் கூடியிருந்த மக்களில் பலர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “கிறிஸ்து வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அடையாளங்களை அவர் செய்வாரோ?” என்றார்கள்.
Settings