எசேக்கியேல் 29:1-9
1
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பத்தாம் வருடம், பத்தாம் மாதம், பன்னிரண்டாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
2
“மனுபுத்திரனே, நீ எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தை திருப்பி, அவனுக்கும் முழு எகிப்திற்கும் விரோதமாய் இறைவாக்குரைத்து சொல்.
3
நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே, நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். “நீயோ, நைல் நதி என்னுடையது; அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.
4
ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி, உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன். உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து, உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.
5
நான் உன்னையும் உன் நீரோடைகளின் எல்லா மீன்களையும் பாலைவனத்தில் விட்டுவிடுவேன். திறந்த வெளியிலே நீ விழுவாய். நீ சேர்க்கப்படவோ எடுக்கப்படவோமாட்டாய். நான் உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
6
அப்பொழுது எகிப்தில் வாழும் அனைவரும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். “ ‘நீ இஸ்ரயேலருக்கு நாணல் புல்லினாலான ஊன்றுகோலாயிருந்தாய்.
7
அவர்கள் உன்னைத் தங்கள் கைகளினால் இறுக்கி பிடித்தபோது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய்.
8
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நானே உனக்கு விரோதமாய் ஒரு வாளைக் கொண்டுவந்து, உன் மனிதர்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன்.
9
எகிப்து அழிந்து பாழ்நிலமாகும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். “ ‘நைல் நதி என்னுடையது; “நானே அதை உன்டாக்கினேன்” என்று நீ சொன்னாய் அல்லவோ?
Settings