Skip to content
யாத்திராகமம் 30:1-15

யாத்திராகமம் 30:1-15

1
“நறுமணத்தூளை எரிப்பதற்கு ஒரு தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்யவேண்டும்.
2
அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருக்கவேண்டும். அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் இருக்கவேண்டும்.
3
அதன் மேல்பகுதியையும், அதன் எல்லா பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைக்கவேண்டும்.
4
தூபபீடத்தின் தங்க விளிம்புச்சட்டத்துக்குக் கீழே இரண்டு தங்க வளையங்களை இரண்டு பக்கங்களிலும் அமைக்கவேண்டும். அதைச் சுமப்பதற்கான கம்புகளை அதற்குள் மாட்டும்படி எதிரெதிராக அவைகளை அமைக்கவேண்டும்.
5
அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
6
தூபபீடத்தை சாட்சிப்பெட்டியின் முன் இருக்கும் திரைக்கு முன்னால் வைக்கவேண்டும். அது நான் உன்னைச் சந்திக்கும் இடமான, சாட்சிப்பெட்டியை மூடியிருக்கும் கிருபாசனத்தின் முன்னே இருக்குமிடம்.
7
“ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத்தூளை எரிக்கவேண்டும்.
8
பொழுதுபடும் நேரத்தில் அவன் விளக்கேற்றும்போது, திரும்பவும் நறுமணத்தூளை எரிக்கவேண்டும். இவ்விதமாக தலைமுறைதோறும் இந்த நறுமணத்தூள் யெகோவாவுக்குமுன் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கும்.
9
இவைகளைத்தவிர வேறெந்த நறுமணத்தூளையோ, தகன காணிக்கையையோ, தானியக் காணிக்கையையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானகாணிக்கையை ஊற்றவும் வேண்டாம்.
10
ஆரோன் வருடத்திற்கு ஒருமுறை இப்பீடத்தின் கொம்புகளின்மேல் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இந்த வருடாந்திர பாவநிவிர்த்தி, பாவநிவாரண பலியின் இரத்தத்தினால் தலைமுறைதோறும் செய்யப்படவேண்டும். இந்தத் தூபபீடம் யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.
11
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
12
“நீ இஸ்ரயேலரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தை யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீ அவர்களைக் கணக்கிடுகையில் அவர்கள்மேல் ஒரு கொள்ளைநோயும் வராது.
13
எண்ணப்படுகிறவன் ஏற்கெனவே எண்ணப்பட்டவர்களிடம் கடந்துபோகும்போது, பரிசுத்த இடத்தின் அளவின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கல் இருபது கேரா நிறையுள்ளது. இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும்.
14
இருபது வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறு கடந்துபோகும் எல்லோரும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுக்கவேண்டும்.
15
உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்காக நீங்கள் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options