Skip to content
எஸ்தர் 8:7-14

எஸ்தர் 8:7-14

7
அகாஸ்வேரு அரசன் எஸ்தர் அரசியிடமும், யூதனான மொர்தெகாயிடமும், “யூதர்களை ஆமான் தாக்கியதினால் அவனுடைய சொத்தை நான் எஸ்தருக்குக் கொடுத்தேன். ஆமானையும் தூக்கு மரத்தில் தூக்கிலிட்டார்கள்.
8
இப்பொழுதும் உங்களுக்கு நலமாய்க் காண்கிறபடியே யூதர்களின் சார்பாக அரசனின் பெயரால் இன்னொரு கட்டளையை எழுதி, அரசனின் மோதிரத்தினால் அதை முத்திரையிடுங்கள். ஏனெனில் அரசனின் பெயரால் எழுதப்பட்டு, அவருடைய மோதிரத்தால் முத்திரையிடப்பட்ட எந்த ஆவணமும் ரத்துச் செய்யப்பட முடியாது” என்றான்.
9
உடனடியாக மூன்றாம் மாதமாகிய சீவான் மாதம் இருபத்தி மூன்றாம் நாளிலே அரச செயலாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யூதர்களுக்கும், அரச பிரதிநிதிகளுக்கும், ஆளுநர்களுக்கும், இந்திய தேசம் முதல் எத்தியோப்பியாவரை பரந்திருந்த நூற்று இருபத்தேழு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மொர்தெகாயின் உத்தரவுகளையெல்லாம் எழுதினார்கள். இந்த உத்தரவுகள் ஒவ்வொரு நாடுகளின் எழுத்திலும், ஒவ்வொரு மக்களின் மொழியிலும் எழுதப்பட்டன. அத்துடன் யூதர்களுக்கும் அவர்களுடைய சொந்த எழுத்திலும், மொழியிலும் எழுதப்பட்டன.
10
மொர்தெகாய் அகாஸ்வேரு அரசனின் பெயரால் எழுதி அந்தக் கடிதங்களை அரசனின் மோதிரத்தினால் முத்திரையிட்டு, குதிரையில் செல்லும் தூதுவர் மூலமாய் அனுப்பினான். அவர்கள் அரசனுக்கென வளர்க்கப்பட்ட குதிரைகளில் வேகமாய்ப் போனார்கள்.
11
அரசனின் கட்டளை, எல்லாப் பட்டணங்களிலுமிருந்த யூதர்கள் ஒன்றாய்க் கூடி தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை வழங்கியது. அவர்களையும், அவர்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையாவது, மாகாணத்தையாவது சேர்ந்த எந்தவொரு ஆயுதம் தாங்கிய படையையும், அழிக்கவும், கொல்லவும், நாசப்படுத்தவும் உரிமை வழங்கியது. அத்துடன் தங்கள் பகைவரின் சொத்தைக் கொள்ளையிடவும் உரிமை வழங்கியது.
12
அகாஸ்வேரு அரசனின் எல்லா மாகாணங்களிலும் யூதர்கள் இதைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாள், ஆதார் மாதமாகிய பன்னிரண்டாம் மாதம் பதிமூன்றாம் நாளாயிருந்தது.
13
அந்த கட்டளையின் ஒரு பிரதி ஒவ்வொரு மாகாணத்திலும் சட்டமாக வழங்கப்படும்படி திட்டமிடப்பட்டிருந்தது. அத்துடன் அந்த நாளில் தங்களுடைய பகைவர்களுக்கும் பதில் செய்ய யூதர்கள் ஆயத்தமாயிருக்கும்படி எல்லா நாட்டையும் சேர்ந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
14
அரச குதிரைகளின்மேல் போய்க்கொண்டிருந்த தூதுவர்கள் அரசனின் கட்டளையினால் தூண்டப்பட்டவர்களாய் விரைந்து சென்றார்கள். சூசான் கோட்டைப் பட்டணத்திலும் இந்தக் கட்டளை வழங்கப்பட்டது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options