எஸ்தர் 2:1-8
1
அகாஸ்வேரு அரசனின் கோபம் தணிந்தபின்பு, அவன் வஸ்தியையும், அவள் செய்ததையும், அவளுக்குத் தான் பிறப்பித்த ஆணையையும் நினைவிற்கொண்டான்.
2
அப்பொழுது அரசனின் அந்தரங்க ஏவலாட்கள் கூறிய ஆலோசனையாவது: “அரசனுக்காக அழகிய இளம் கன்னிகைகளைக் தேடிப்பார்ப்போம்.
3
சூசானிலுள்ள கோட்டைப் பட்டணத்திலிருக்கும் அந்தப்புரத்திற்கு அந்த அழகிய இளம்பெண்களையெல்லாம் கொண்டுவரும்படி, அரசர் தம்முடைய ஆளுகைக்கு உட்பட்ட, எல்லா நாடுகளிலும் மேற்பார்வையாளர்களை நியமிப்பாராக. பெண்களுக்குப் பொறுப்பாயிருக்கிற, அரசனின் அதிகாரியான யேகாயின் பராமரிப்பின்கீழ் அப்பெண்கள் வைக்கப்படட்டும். அங்கு அவர்கள் அழகுபடுத்தப்படுவார்களாக.
4
பின்பு அரசருக்குப் பிரியமாயிருக்கிற இளம்பெண், வஸ்திக்குப் பதிலாக அரசியாயிருக்கட்டும்” என்றார்கள். இந்த ஆலோசனை அரசனுக்குப் பிரியமாயிருந்ததால், அதை அவன் நடைமுறைப்படுத்தினான்.
5
அக்காலத்தில் சூசான் கோட்டைப் பட்டணத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த, மொர்தெகாய் என்னும் பெயருடைய ஒரு யூதன் இருந்தான். இவன் யாவீரின் மகன், யாவீர் சீமேயின் மகன், சீமேயி கீசின் மகன்.
6
இந்த மொர்தெகாய், யூதா அரசன் எகொனியாவுடன், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரினால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களோடுகூட நாடு கடத்தப்பட்டிருந்தவன்.
7
மொர்தெகாய்க்கு அத்சாள் என்னும் பெயருடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு தாய் தகப்பன் இல்லாததினால் அவளை இவன் வளர்த்தான். அவள் எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். இந்தப் பெண் வடிவத்திலும், தோற்றத்திலும் மிகவும் அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய தகப்பனும் தாயும் இறந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் சொந்த மகளாக எடுத்து வளர்த்தான்.
8
அரசனுடைய உத்தரவும் கட்டளையும் அறிவிக்கப்பட்டபோது, அநேக பெண்கள் சூசான் கோட்டைப் பட்டணத்திற்கு கொண்டுவரப்பட்டு யேகாயின் பராமரிப்பில் வைக்கப்பட்டார்கள். எஸ்தரும் அரசனின் அரண்மனைக்குக் அழைத்துச்செல்லப்பட்டு, அந்தப்புரத்திற்குப் பொறுப்பாயிருந்த யேகாயிடத்தில் கொடுக்கப்பட்டாள்.
Settings