Skip to content
உபாகமம் 28:33-57

உபாகமம் 28:33-57

33
உங்கள் நிலமும், உங்கள் முயற்சியும் விளைவித்த பலனை, நீங்கள் அறியாத மக்கள் சாப்பிடுவார்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கொடுமையான ஒடுக்குதலைத்தவிர, வேறொன்றும் உங்களுக்குக் கிடைக்காது.
34
நீங்கள் காணும் இக்காட்சிகள், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக்கும்.
35
யெகோவா உங்கள் முழங்கால்களையும், கால்களையும் குணமாக்கமுடியாதபடி வேதனை நிறைந்த கொப்புளங்களால் வாதிப்பார். அவை உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை பரவும்.
36
யெகோவா உங்களையும், நீங்கள் உங்களுக்கென்று ஏற்படுத்துகிற அரசனையும், நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாத ஒரு நாட்டவரிடம் துரத்துவார். அங்கே நீங்கள் மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்ட தெய்வங்களான அந்நிய தெய்வங்களை வழிபடுவீர்கள்.
37
யெகோவா உங்களைத் துரத்திவிடும் மக்கள் கூட்டங்களுக்குள் நீங்கள் அவர்களுக்கு பயங்கரக் காட்சியாகவும், ஏளனத்துக்கும், கேலிக்கும் உரியவர்களாகவும் இருப்பீர்கள்.
38
நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும்.
39
நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
40
நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும்.
41
உங்களுக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை வைத்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
42
உங்கள் மரங்களையும், நிலத்தின் பயிர்களையும் வெட்டுக்கிளிக்கூட்டங்கள் அரித்துவிடும்.
43
உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள்.
44
அவன் உங்களுக்குக் கடன் கொடுப்பான், நீங்கள் அவனுக்குக் கடன் கொடுக்கமாட்டீர்கள். அவன் தலையாயிருப்பான், நீங்களோ வாலாயிருப்பீர்கள்.
45
இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும்.
46
இவை உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் என்றென்றைக்கும் ஒரு அடையாளமும், அதிசயமுமாய் இருக்கும்.
47
நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை.
48
ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார்.
49
யெகோவா உங்களுக்கு எதிராகப் பூமியின் கடைசியான தூரத்திலிருந்து ஒரு நாட்டைக் கொண்டுவருவார். அவர்கள் ஒரு கழுகு பறக்கும் வேகத்துடன் வருவார்கள். அந்த நாட்டவர்களின் மொழி உங்களுக்கு விளங்காது.
50
பயங்கரத் தோற்றமுடைய அந்த நாடு முதியோருக்கு மதிப்பையோ, வாலிபருக்கு அனுதாபத்தையோ காட்டாது.
51
நீங்கள் அழியும்வரை அவர்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளையும், நிலத்தின் பலனையும் விழுங்கிவிடுவார்கள். நீங்கள் பாழாய்ப்போகும்வரை உங்களுக்காக தானியத்தையோ, புது திராட்சை இரசத்தையோ, ஒலிவ எண்ணெயையோ, மாட்டு மந்தையின் கன்றுகளையோ, செம்மறியாட்டு மந்தையின் குட்டிகளையோ விட்டுவைக்கமாட்டார்கள்.
52
நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள்.
53
முற்றுகையிடும்போது, உங்கள் பகைவர்கள் உங்களைத் துன்புறுத்தி வேதனைப்படுத்துவதினால், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற கர்ப்பத்தின் கனியான மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவீர்கள்.
54
உங்கள் மத்தியில் மிகுந்த சாதுவாகவும், மென்மையாகவும் இருக்கும் மனிதன்கூட, தன் சொந்த சகோரனிடத்திலோ, தான் அன்பு செலுத்துகிற மனைவியினிடத்திலோ, தப்பிப்பிழைத்த தன் பிள்ளைகளினிடத்திலோ கருணை காட்டமாட்டான்.
55
அவர்களில் ஒருவனுக்காவது தான் சாப்பிடும் தன் பிள்ளைகளின் சதையை அவன் கொடுக்கமாட்டான். உங்கள் பட்டணங்களையெல்லாம் உங்கள் பகைவர் முற்றுகையிடும்போதும், உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போதும் அவனுக்குச் சாப்பிடுவதற்கு அந்தப் பிள்ளையின் சதையைவிட வேறு எதுவும் கிடைக்காது.
56
தன் பாதங்களை நிலத்தில் வைத்து நடக்கத் துணியாமல் மிகவும் சாதுவாகவும், மென்மையாகவும் உங்கள் மத்தியில் இருக்கும் பெண்ணும்கூட, தான் அன்பு செலுத்தும் கணவனுக்கோ, தன் சொந்த மகனுக்கோ, மகளுக்கோ
57
தன் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்படும் நச்சுக்கொடியையும், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளையும்கூட கொடுத்துச் சாப்பிடமாட்டாள். ஏனெனில் உங்கள் பட்டணங்களில் உங்கள் பகைவர் உங்களைக் கொடுமையாய் வேதனைப்படுத்தும்போது, அந்த முற்றுகை வேளையில் அவற்றை இரகசியமாகவே தான் சாப்பிடுவது அவளின் நோக்கமாயிருக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options