உபாகமம் 16:1-8
1
ஆபீப் மாதத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள். ஏனெனில் ஆபீப் மாதத்தில் ஒரு இரவில் அவர் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.
2
நீங்கள் உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை எடுத்து, அதை உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்காவாகப் பலியிடுங்கள். அதை யெகோவா தமது பெயர் விளங்குவதற்காக தாம் தெரிந்துகொள்ளும் இடத்திலே பலியிடுங்கள்.
3
அதை புளிப்பூட்டப்பட்ட அப்பத்தோடு சாப்பிடவேண்டாம், ஏழுநாட்களுக்கு உபத்திரவத்தின் அப்பமான புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள், நீங்கள் எகிப்திலிருந்து அவசரமாய் வெளியேறினீர்களே. எனவே உங்கள் வாழ்நாளெல்லாம் நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த வேளையை நினைவுகூருங்கள்.
4
அந்த ஏழுநாளளவும் உங்கள் நாடு முழுவதிலும் புளிப்பூட்டும் பதார்த்தம் உங்களுக்குள் இருக்கக்கூடாது. முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையாகிலும் விடியும்மட்டும் வைத்திருக்கவும்கூடாது.
5
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் எந்த ஒரு பட்டணத்திலாவது பஸ்காவை பலியிடக்கூடாது.
6
உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொண்ட இடத்திலேயே அதைப் பலியிடவேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய அந்த நாளில் சூரியன் மறையும் நேரமான அந்த மாலைவேளையில் பஸ்காவை அங்கே பலியிடவேண்டும்.
7
உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் பலியை நெருப்பில் வாட்டிச் சாப்பிடுங்கள். காலையில் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.
8
தொடர்ந்து ஆறு நாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஏழாம்நாளில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்த நாளில் எந்தவொரு வேலையையும் செய்யவேண்டாம்.
Settings