ஆமோஸ் 9:1-6
1
யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்: அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள். தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும். அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள். மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன். ஒருவனும் தப்பி ஓடமாட்டான், ஒருவனுமே தப்பமாட்டான்.
2
பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும். அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும், அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன்.
3
கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன். என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.
4
தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன். “நன்மைக்காக அல்ல, தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.”
5
யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், அது உருகுகிறது, அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்; முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது, பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.
6
யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார், பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்; கடல்நீரை அழைத்து பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார். யெகோவா என்பது அவர் பெயர்.
Settings