1 சாமுயேல் 2:11-21
11
அதன்பின் எல்க்கானா ராமாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சாமுயேலோ ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
12
ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை.
13
மக்களில் எவராவது பலி செலுத்தும்போது, இறைச்சி வேகும் வேளையில் ஆசாரியனின் பணியாளன் ஒருவன், மூன்று கூருள்ள ஒரு கரண்டியைக் கொண்டுவருவது அவர்களின் நடைமுறையாயிருந்தது.
14
பணியாளன் இறைச்சி வேகும் சட்டியிலோ, கிண்ணத்திலோ, அண்டாவிலோ, பானையிலோ அந்த கரண்டியை உள்ளேவிட்டுக் குத்துவான். அப்பொழுது ஆசாரியன் அந்த கரண்டியால் குத்தி எடுப்பது எதுவோ அதைத் தனக்கென எடுத்துக்கொள்வான். இவ்விதமாக சீலோவுக்கு வருகிற இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் இப்படியே நடத்தினார்கள்.
15
மேலும், பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன்னரே ஆசாரியனின் பணியாள் பலி செலுத்துபவனிடம் வந்து, “ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி கொஞ்சம் இறைச்சி கொடு; அவர் பச்சை இறைச்சியே அல்லாமல், வேகவைத்த இறைச்சியை உன்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்பான்.
16
அப்பொழுது பலிசெலுத்துபவன் பணியாளனிடம், “கொழுப்பு முதலில் எரிக்கப்படட்டும். அதன்பின் நீ விரும்பிய எதையும் எடுத்துக்கொள்” என்று சொன்னால் அதற்கு பணியாளன், “இல்லை, இப்பொழுதே கொடு; கொடுக்காவிட்டால் நான் பலவந்தமாய் அதை எடுத்துக்கொள்வேன்” என்பான்.
17
இதனால், ஏலியின் மகன்களின் இந்த பாவம் யெகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யெகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள்.
18
சிறுவனாகிய சாமுயேல் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தான்.
19
அவனுடைய தாய் தங்கள் வருடாந்த பலியைச் செலுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் தன் கணவனுடன் அங்கே வரும்போது, சாமுயேலுக்கு ஒரு சின்ன அங்கியைத் தைத்துக் கொண்டுவருவாள்.
20
அவ்வேளை ஏலி எல்க்கானாவையும், அவன் மனைவியையும் ஆசீர்வதித்து அவர்களிடம், “இப்பெண் யெகோவாவிடம் மன்றாடிப்பெற்று, யெகோவாவுக்கே திரும்பக் கொடுத்த தனது பிள்ளைக்குப் பதிலாக, அவர் இவள்மூலம் உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பராக” என்பான். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள்.
21
அப்படியே யெகோவா அன்னாள்மேல் கிருபையாயிருந்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள். சிறுவன் சாமுயேல் யெகோவா முன்னிலையில் வளர்ந்தான்.
Settings