எரேமியா 15:1-9
1
அதன்பின் யெகோவா என்னிடம், “மோசேயும் சாமுயேலும் எனக்குமுன் நின்று மன்றாடினாலுங்கூட, இந்த மக்களுக்கு இரங்கமாட்டேன். எனக்கு முன்னின்று அவர்களை அனுப்பிவிடு; அவர்கள் போகட்டும்.
2
‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: “ ‘மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள் மரணத்துக்கும், வாளுக்குக் குறிக்கப்பட்டவர்கள் வாளுக்கும், பஞ்சத்திற்குக் குறிக்கப்பட்டவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்குக் குறிக்கப்பட்டவர்கள் சிறையிருப்புக்கும் போவார்கள்.’
3
“நான் அவர்களுக்கு எதிராக நான்குவிதமான அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களைக் கொல்வதற்கு வாளையும், இழுத்துக்கொண்டு போவதற்கு நாய்களையும், அவர்களைத் தின்று அழிப்பதற்கு ஆகாயத்துப் பறவைகளையும், பூமியிலுள்ள மிருகங்களையும் அனுப்புவேன்.
4
யூதாவின் அரசன் எசேக்கியாவின் மகன் மனாசே, எருசலேமில் செய்தவற்றிற்காக நான் அவர்களை உலகின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாக்குவேன்.
5
“எருசலேமே! யார் உன்மேல் அனுதாபப்படுவார்கள்? யார் உனக்காக துக்கிப்பார்கள்? நீ எப்படியிருக்கிறாய் என்று கேட்க யார் வருவார்கள்?
6
நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ தொடர்ந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறாய். ஆகையால் நான் உனக்கெதிராய் என் கையை நீட்டி, உன்னை அழிப்பேன். என்னால் இனிமேலும் இரக்கங்காட்ட முடியாது.
7
நாட்டில் பட்டணத்து வாசல்களில் அவர்களை தூற்றுக் கூடையினால் தூற்றுவேன். அவர்கள் தங்கள் வழிகளைவிட்டு மனந்திரும்பாதபடியினால் என் மக்களை தவிக்கச்செய்து, அவர்கள்மேல் அழிவைக் கொண்டுவருவேன்.
8
அவர்களின் விதவைகளை கடற்கரை மணலைப் பார்க்கிலும் எண்ணற்றவர்களாக்குவேன். நண்பகலில் அவர்களுடைய வாலிபரின் தாய்மாருக்கு எதிராக அழிக்கிறவனைக் கொண்டுவருவேன். திடீரென அவர்கள்மீது கலகத்தையும், பயங்கரத்தையும் கொண்டுவருவேன்.
9
ஏழு பிள்ளைகளின் தாய் மூச்சடைத்து செத்துப்போவாள். இன்னும் பகல் வேளையாயிருக்கும்போதே அவளுடைய சூரியன் அஸ்தமிக்கும். அவள் அவமானத்துக்குள்ளாகி தாழ்த்தப்பட்டுப் போவாள். அவர்களில் தப்பியிருப்பவர்களை அவர்களுடைய பகைவருக்கு முன்பாக வாளுக்கு இரையாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Settings