எபிரெயர் 11:33-38
33
இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே அரசுகளை வென்றெடுத்தார்கள். நீதியை நடைமுறைப்படுத்தினார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டார்கள். சிங்கங்களின் வாய்களைக் கட்டினார்கள்.
34
கொழுந்து விட்டெரியும் நெருப்பின் அனலையும் அணைத்தார்கள். வாள்முனைக்கும் தப்பினார்கள். அவர்களது பலவீனங்கள் பலமுள்ளதாய் மாற்றப்பட்டன. அவர்கள் யுத்தத்தில் வலிமையுடையவர்களாகி, அந்நிய படைகளைத் தோற்கடித்தார்கள்.
35
விசுவாசத்தினாலேயே பெண்கள் தங்கள் இறந்தவர்களை மீண்டும் உயிரோடப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் வேறுசிலரோ துன்புறுத்தப்பட்டும், ஒரு மேன்மையான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்வதற்காகவே விடுதலை பெற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
36
இன்னும் சிலர் ஏளனத்துக்குள்ளாகி, சவுக்கால் அடிக்கப்பட்டார்கள். வேறுசிலர் விலங்கிடப்பட்டவர்களாய், சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
37
அவர்கள் கல்லெறியப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், வாளினால் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் உடுத்திக்கொண்டு திரிந்தார்கள். குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அநுபவித்தார்கள்.
38
இந்த உலகமோ அவர்களுக்குத் தகுதியற்றதாயிருந்தது. அவர்கள் பாலைவனங்களிலும், மலைகளிலும் அலைந்து, குகைகளிலும், நிலத்திலுள்ள கிடங்குகளிலும் வாழ்ந்தார்கள்.
Settings