உபாகமம் 9:1-6
1
இஸ்ரயேலரே, கேளுங்கள்: இப்பொழுது நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்களைவிட அதிகமானவர்களும் வலிமையானவர்களுமான நாடுகளைத் துரத்திவிடப் போகிறீர்கள். அவர்கள் வானத்தை எட்டும் மதில்களையுடைய பெரிய பட்டணங்களில் வாழ்கிறார்கள்.
2
அந்த மக்கள் வலிமையும் உயரமுமான அரக்கர்கள்! நீங்கள் அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள்: “ஏனாக்கியருக்கு எதிராக யாரால் நிற்கமுடியும்?” என்று அவர்களைக்குறித்து சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டும் இருக்கிறீர்கள்.
3
ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு முன்பாக சுட்டெரிக்கும் நெருப்பைப்போல் போகிறவர் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். அவர் அவர்களை அழிப்பார்; உங்களுக்கு முன்பாக அவர்களைக் கீழ்ப்படுத்துவார். யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியது போலவே, நீங்கள் அவர்களை வெளியே துரத்தி, விரைவில் அவர்களை அழித்தொழிப்பீர்கள்.
4
உங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட பின்பு, “எங்களுடைய நீதியின் காரணமாகவே யெகோவா இந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்வதற்கு எங்களை இங்கு கொண்டுவந்திருக்கிறார்” என்று நீங்கள் நினைக்கவேண்டாம். அப்படியல்ல, இந்த நாடுகளின் கொடுமையின் காரணமாகவே யெகோவா அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகிறார்.
5
நீங்கள் இந்த நாட்டை உங்கள் நீதியின் காரணமாகவோ, உங்கள் உத்தமத்தின் காரணமாகவோ உரிமையாக்கப்போவது அல்ல; இந்த நாட்டவரின் கொடுமையின் காரணமாகவும், உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குத் தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும்படிக்கும் அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடப்போகிறார்.
6
உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த வளமான நாட்டை நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி, அதை உங்களுக்குக் கொடுப்பது உங்கள் நேர்மையின் காரணமாக அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.
Settings