உபாகமம் 11:8-17
8
நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றையும் பதித்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால்தான் நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கிக்கொள்ளும் நாட்டைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்குப் பெலன் இருக்கும்.
9
அப்படியே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்கும், அவர்கள் சந்ததிக்கும் தருவேன் என்று வாக்களித்த பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டிலே நீங்கள் நீடித்து வாழ்வீர்கள்.
10
ஏனெனில், நீங்கள் கைப்பற்றுவதற்காக செல்லப்போகும் நாடு நீங்கள் விட்டுவந்த எகிப்து நாட்டைப்போல் இராது. எகிப்திலே நீங்கள் விதையை நாட்டி, காய்கறித் தோட்டத்திற்கு கஷ்டப்பட்டு உங்கள் காலால் நீர்ப்பாசனப் பள்ளங்களைத் தோண்டி நீர்பாய்ச்சினீர்கள்.
11
ஆனால் நீங்கள் யோர்தானைக் கடந்து உரிமையாக்கப்போகும் நாடு, மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள நாடு, அது வானத்திலிருந்து மழைநீரால் பாய்ச்சல் பெறும் நாடு.
12
அது உங்கள் இறைவனாகிய யெகோவா பராமரிக்கும் நாடு. வருடத்தின் தொடக்கமுதல் முடிவுவரை அந்த நாட்டின்மேல் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வை தொடர்ந்து இருக்கும்.
13
இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் என் கட்டளைகளுக்கு நீங்கள் உண்மையாகக் கீழ்ப்படிந்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்புகூர்ந்து உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குப் பணிசெய்வீர்களானால்,
14
அவர் உங்கள் நாட்டிற்குக் கோடை மழையையும், இலையுதிர்காலம் மற்றும் வசந்தகால மழையையும் அதினதின் காலத்தில் அனுப்புவார். ஆகவே உங்கள் தானியத்தையும், புது திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் நீங்கள் குறைவில்லாமல் சேர்த்துக்கொள்வீர்கள்.
15
உங்கள் வளர்ப்பு மிருகங்களுக்கு வெளிகளிலே வயல்வெளிகளிலே பண்ணுவார்; நீங்களும் சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.
16
நீங்கள் வேறு தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றை வழிபட்டு, அவர்களை வணங்குமாறு உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாதபடி கவனமாயிருங்கள்.
17
இல்லாவிட்டால், யெகோவாவின் கோபம் உங்களுக்கு விரோதமாக மூண்டு, மழை பெய்யாதபடி வானத்தை அடைத்துப்போடுவார். அப்போது உங்கள் நிலமும் தன் பலனைத் தராது; யெகோவா உங்களுக்குக் கொடுத்த நல்ல நாட்டிலிருந்து நீங்களும் அழிந்துபோவீர்கள்.
Settings