தானியேல் 5:10-16
10
அவ்வேளையில் அங்கு நடந்தவற்றினால் ஏற்பட்ட கூச்சலைக்கேட்ட அரசனின் தாய், விருந்து மண்டபத்திற்குள் விரைந்து வந்தாள். அவள், “அரசே, நீர் நீடூழி வாழ்க. நீர் இதனால் கலங்கவோ, உமது முகம் வேறுபவோ வேண்டியதில்லை.
11
உமது அரசில் பரிசுத்த தெய்வங்களின் ஆவியைப்பெற்ற ஒரு மனிதன் இருக்கிறான். அவன் உமது தந்தையின் காலத்தில் தெய்வங்களுக்குரிய நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், ஞானமும் உள்ளவனாய் காணப்பட்டான். அதனால் உமது தந்தை நேபுகாத்நேச்சார் அவனை மந்திரவாதிகளுக்கும், மாந்திரீகர்களுக்கும், சோதிடருக்கும், குறிசொல்பவர்களுக்கும் தலைவனாக நியமித்தார்.
12
பெல்தெஷாத்சார் என அரசனால் பெயரிடப்பட்ட இந்த மனிதனான தானியேல் மதிநுட்பமும், அறிவும், விளங்கிக்கொள்ளும் தன்மையும் உடையவனாய் காணப்பட்டான். அத்துடன் கனவுகளுக்கு விளக்கம் கூறுவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் ஆற்றல் உடையவனாயிருந்தான். தானியேலைக் கூப்பிடும். அவன் அந்த எழுத்துகளுக்கு அர்த்தத்தைச் சொல்வான் என்றாள்.”
13
எனவே தானியேல் அரசனின் முன் கொண்டுவரப்பட்டான். அரசன் அவனிடம், “அரசனாகிய எனது தந்தை யூதாவிலிருந்து சிறைப்பிடித்து வந்தவர்களில் ஒருவனாகிய தானியேல் நீ தானா?
14
உன்னிடத்தில் பரிசுத்த தெய்வங்களின் ஆவி இருப்பதாகவும், நுண்ணறிவும், புத்திக்கூர்மையும், சிறந்த ஞானமும் உண்டெனவும் கேள்விப்பட்டேன்.
15
அந்த எழுத்தை வாசிக்கவும், அதன் அர்த்தத்தைச் சொல்லவும் ஞானிகளும், சாஸ்திரிகளும் எனக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார்கள். ஆனால் அதற்கு விளக்கம்கூற அவர்களால் முடியவில்லை.
16
இப்பொழுது உனக்கு விளக்கம் கூறவும், கடினமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் ஆற்றல் உண்டு எனக் கேள்விப்பட்டேன். அந்த எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்கு உன்னால் கூறமுடியுமானால், உனக்கு சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, உனது கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, அதோடு எனது அரசில் மூன்றாம் பெரிய ஆளுநனாக நியமிக்கப்படுவாய் என்றான்.”
Settings